அண்மையில் கடலுக்குள் 400 டன் எண்ணெய் கசிந்த சம்பவத்தை அடுத்து, இத்தகைய சம்பவங்களின் பாதிப்பைத் தணிக்க துறைமுக அதிகாரிகளும் கப்பல் குழுவினரும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கப்பல் தலைவர்கள் சிலர் பரிந்துரைத்தனர்.
10 முதல் 30 ஆண்டுகள் வரை பயணம் செய்த அனுபவம் உள்ள தற்போது பணியிலிருக்கும் இரு கப்பல் கேப்டன்கள், ஒரு முன்னாள் கேப்டன் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் உடன் பேசினர். தற்போது நடப்பிலுள்ள நடைமுறைகளில் சாத்தியமான முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் பரிந்துரைத்தனர்.
கிட்டத்தட்ட 30 ஆண்டு அனுபவமுள்ள கேப்டன் ஏ, எண்ணெய்க் கசிவுகளைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துறைமுகம் அல்லது முனையங்களில் கப்பல் நங்கூரமிடும் பகுதிகளில் மிதவை தடுப்புகளை வைக்கலாம் என்றார். குழு உறுப்பினர்கள் ஊடகங்களிடம் பேசுவதை நிறுவனக் கொள்கை கட்டுப்படுத்துவதால் அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சில துறைமுகங்கள், இந்த மிதக்கும் சாதனங்களை நங்கூரமிடும் பகுதிகளில் வைத்துள்ளன. கசிவு ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் எண்ணெய்யைத் தடுத்து வைக்க அது தடுப்பாகச் செயல்படுகிறது.
அனைத்துலக கடல்சார் பாதுகாப்புத் தரங்களின்படி, கப்பல் குழுவினர் பல்வேறு நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் வழக்கமான பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சிங்கப்பூர் கடல்துறைப் பயிற்சிக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கேப்டன் சஹ்வான் ஒஸ்மான் கூறினார்.
10 ஆண்டுகள் கப்பல் பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் சஹ்வான் 19 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார். கப்பல் குழுவினர் விதிமுறைகளின் தேவைக்கு அதிகமான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று முன்மொழிந்தார்.
இளம் கப்பல் மாலுமியாக இருந்தபோது, அவரது அப்போதைய கேப்டன், விதிமுறைப்படி மாதம் ஒருமுறை நடத்த வேண்டிய அவசரகால வெளியேற்றப் பயிற்சியை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துவார். இது செயல்முறை படிநிலைகளை மனதில் வைத்துக்கொள்ள உதவியது என்று 61 வயதான கேப்டன் சஹ்வான் கூறினார்.
சிங்கப்பூர் கடற்பகுதியில் பயணிப்பது அதன் தனிப்பட்ட சவால்களைக் கொண்டுள்ளது. ஏனெனில் அதன் நீர்வழிகள் வெளிப்புறத் தீவுகள் , அண்டை நாடுகளால் சூழப்பட்டுள்ளன என்று மூன்று கேப்டன்களும் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிங்கப்பூர் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து அதிகமாக உள்ளதுடன், நங்கூரமிடும் பகுதிகளும் ஒன்றுக்கொன்று அருகில் அமைந்துள்ளன.
கப்பலின் கேப்டனுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் துறைமுக அதிகாரி இன்றி, நெரிசல் மிகுந்த சிங்கப்பூர் கடற்பகுதியில் செல்வது சவாலானது என்று 12 ஆண்டுகால கடல்சார் அனுபவத்தைக் கொண்ட கேப்டன் பி குறிப்பிட்டார்.
துறைமுக அதிகாரி என்பவர் கப்பலைக் கையாளும் உள்ளூர் நிபுணர். அவர் வெளிநாட்டுக் கொடியுள்ள கப்பலில் சென்று துறைமுகங்களுக்குள் வரவும் வெளியே செல்லவும் பாதுகாப்பாக வழிநடத்துவார்.
நெதர்லாந்துக் கொடியை ஏந்திய தூர்வாரிக் கப்பல் வோக்ஸ் மாக்ஸிமா ஜூன் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் திடீரென்று இயந்திரம், சுக்கானின் கட்டுப்பாடுகளை இழந்தபோது, பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர்க் கொடி தாங்கிய எண்ணெய்க் கப்பலை மோதி, அதன் எண்ணெய்த் தொட்டிகளில் ஒன்றை உடைத்தது. அதனால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு இன்னும் சுத்தம் செய்யப்படுகிறது.
துறைமுகத்தில் உள்ள அத்தகைய செயலிழந்த கப்பல் ‘பேரழிவு’க்கு வழிவகுக்கும் என்று கேப்டன் ஏ கூறினார்.
சிங்கப்பூர் கடற்பகுதியின் நுழைவாயில்கள் மிகவும் குறுகலாகவும் பரபரப்பாகவும் இருப்பதால், ஒரு கப்பலின் செயலிழப்பு, கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதுடன் துறைமுகச் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என்று அவர் கூறினார்.
ஜப்பான் , சீனா போன்ற பெரிய நாடுகளில் உள்ள துறைமுகங்கள் பெரிய நீர்முகப்புகளைக் கொண்டுள்ளன. அத்தகைய பகுதிகளில் ஏற்படும் கப்பல் செயலிழப்பு சிங்கப்பூரில் ஏற்படுவதைவிட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
கப்பல்கள் வெளிநாட்டுத் துறைமுகங்களில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், செயல்பாட்டுத் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், எனவே அவை தங்கள் இயந்திரங்கள், சுக்கான் கட்டுப்பாடுகளை பராமரிக்க வேண்டும் என்று 40 வயதான கேப்டன் பி குறிப்பிட்டார்.
எனினும் கப்பல் உபகரணங்களின் செயல்பாடு சிக்கலானவை என்பதால் சில நேரங்களில் புதிய கப்பலுக்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படக்கூடும்,
இருப்பினும், ஒரு கப்பலின் இயந்திரமும் சுக்கானும் திடீரெனக் கட்டுப்பாட்டை இழப்பது அரிது என்று மூன்று கேப்டன்களும் தெரிவித்தனர். தங்கள் வேலை அனுபவத்தில் ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே அதை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.
கப்பல் குழுவினர் கப்பலின் உயர் அதிர்வெண் வானொலியில் நெருக்கடிநிலை குறித்து மற்ற கப்பல்களை எச்சரிப்பதுடன் அது கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கான சமிக்ஞைகளையும் வெளியிட வேண்டும் என்று கேப்டன் சஹ்வான் கூறினார்.