உணவங்காடிக் கடைக்காரர்கள் சுயமாகத் தங்கள் கடைகளை நடத்த வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் (மார்ச் 10) வலியுறுத்தினார்.
கடைக்காரர்கள் கடையில் இருந்தால்தான் அடுத்தவர்கள் அவற்றை வாடகைக்கு விடுவது தவிர்க்கப்படும் என்றார் அவர்.
கடைகளை நடத்துவோர் கடையில் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் ஏன் வலியுறுத்துகிறது என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டது.
ஈசூன் பார்க் உணவங்காடி நிலையக் கடையில் கர்ப்பிணியான மனைவியை நீண்ட நேரம் நிற்க வைத்ததாக ஃபேஸ்புக்கில் ஒரு கடைக்காரர் பதிவிட்டதை அடுத்து அமைப்பின் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.
கடைக்கு உரிமையாளராகப் பதிவுசெய்யப்பட்ட தமது மனைவி கடையில் இல்லை என்பதற்காகத் தேசியச் சுற்றுப்புற வாரியம் அவருக்கு எச்சரிக்கை அனுப்பியதை ஆடவர் குறிப்பிட்டார்.
ஆனால், உரிமையாளர்கள் கடையில் இருந்தால்தான் அடுத்தவர்கள் கடையைக் குறைந்த விலையில் குத்தகைக்கு விட முடியாது என்று டாக்டர் கோ சுட்டினார்.
சிறிய வர்த்தகங்கள் உணவங்காடிச் சந்தைக்குள் கால் பதிக்கவும் தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் நடைமுறை கைகொடுக்கிறது என்றார் அவர்.
பெரிய வர்த்தகங்கள் உணவங்காடிக் கடைகளில் ஆதிக்கம் செலுத்தி அது செயல்படும் முறையை மாற்றுவதைத் தவிர்ப்பது நடைமுறையின் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
நாட்டை மேம்படுத்துவதில் உணவங்காடி நிலையங்கள் அளப்பரிய பங்கு வகித்தன என்ற டாக்டர் கோ, அது சிங்கப்பூரின் ஓர் முக்கிய அடையாளம் என்றார்.
குறிப்பிட்ட ஒரு கடையை ஒருவரால் நடத்த முடியாவிட்டால் தேசியச் சுற்றுப்புற வாரியத்திடம் அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
அது புதிய நபர்கள் கடைகளை நடத்த ஒரு வாய்ப்பளிக்கும் என்றார் அவர்.

