எல்லை தாண்டிய காற்றுத் தூய்மைக்கேட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு $20 மில்லியன் வெள்ளி வரை அபராதம் விதிக்கவும் அவற்றின் வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் சிங்கப்பூர் பரிந்துரைத்துள்ளது. இதற்கான எல்லை தாண்டிய காற்றுத் தூய்மைக்கேட்டுச் சட்டத் திருத்தங்கள் புதன்கிழமையன்று (நவம்பர் 4) முன்வைக்கப்பட்டன.
அதிகபட்ச அபராதத் தொகையை $2 மில்லியனிலிருந்து $20 மில்லியனுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் நாடு சந்தித்த மிக மோசமான புகைமூட்டச் சூழலைத் தொடர்ந்து, அதிபரின் கையொப்பமிட்ட அவசரச் சான்றிதழின்கீழ் ‘எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேடு (திருத்த) மசோதா’ தாக்கல் செய்யப்பட்டு இரண்டாம் வாசிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
ஒரே நாடாளுமன்ற அமர்விலேயே ஒரு மசோதாவைத் தாக்கல் செய்து, விவாதித்து, மூன்று வாசிப்புகளையும் நிறைவேற்றிச் சட்டமாக்க இந்த அவசரச் சான்றிதழ் வழிவகை செய்கிறது.
இதற்கு முன்னர், 2024ஆம் ஆண்டில் ஜெர்மனியின் அலையன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரின் இன்கம் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்கு பெறுவதைத் தடுப்பதற்காக ‘காப்புறுதி (திருத்த) மசோதா’ இதே நடைமுறையின்கீழ் நிறைவேற்றப்பட்டது.
2014ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த ‘எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேடு சட்டம்’ வர்த்தக ரீதியிலான தொடர்புகளைப் புலனாய்வு செய்வதற்கும் தவறிழைக்கும் நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்வதற்கும் அதிகாரிகளுக்கு கூடுதல் வழிமுறைகளை வழங்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சட்டத்திருத்தங்கள் அதிகாரிகள் தொடக்கத்திலேயே தலையிடவும் சட்ட அமலாக்கத்தை எளிதாக்கவும் உதவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகைமூட்டத்திற்குத் தொடர்புடைய நிறுவனங்களை ஒடுக்கத் தேவையான இடங்களில் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று மூத்த அமைச்சர் கா. சண்முகமும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் பூவும் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
