புகைமூட்ட விசாரணை: மதிப்பீட்டாளரை நியமிக்க மேலும் மூன்று நிறுவனங்கள் இணக்கம்

புகைமூட்ட விசாரணை: மதிப்பீட்டாளரை நியமிக்க மேலும் மூன்று நிறுவனங்கள் இணக்கம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Nov 2026 - 2:22 pm

2 mins read

எல்லை தாண்டிய புகைமூட்டத்திற்கு வழிவகுத்த காட்டுத் தீச்சம்பவங்களுடன் தொடர்பிருக்கக்கூடிய மேலும் மூன்று சிங்கப்பூர் பதிவுபெற்ற நிறுவனங்கள், நிபுணர் குழுவின் மதிப்பீட்டிற்கு ஒத்துழைப்பு நல்க இணங்கியுள்ளன. அந்த நிறுவனங்களை நிபுணர் குழு ஆய்வு செய்யும்.

சிங்கப்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டிஎஸ்எச் ரிசோர்சஸ், பூமித்தாமா அக்ரி, கெஞ்சானா அக்ரி ஆகியவையே அந்த மூன்று நிறுவனங்களாகும்.

தேசியச் சுற்றுப்புற அமைப்பு விடுத்த அறிவிக்கைகளில், டிஎஸ்எச் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அதன் துணை நிறுவனங்களான டிஎஸ்எச் குளோபல் பிளான்டேஷன், டிஎஸ்எச் ஓவர்சீ ஆகிய இரண்டும் அந்த அறிவிக்கைகளைப் பெற்ற பத்து நிறுவனங்களின் பட்டியலில் அடங்கும்.

ஏபிபி கம்பனி, ஏபிபி சைனா, பூமித்தாமா அக்ரி, கோல்டன் அக்ரி இன்டர்நேஷனல், ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ், இந்தோஃபுட் அக்ரி ரிசோர்சஸ், கெஞ்சானா அக்ரி, டிஎஸ்எச் குளோபல் பிளான்டேஷன், டிஎஸ்ஹெச் ஓவர்சீ, வில்மார் இன்டர்நேஷனல் ஆகியவை அந்த பத்து நிறுவனங்களாகும்.

சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கைகள் விடுக்கப்பட்டன. அக்டோபர் 28ஆம் தேதியன்று மூத்த அமைச்சர் கா.சண்முகம், துணைப் பிரதமர் கான் கிம் யோங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அச்சந்திப்பின்போது நிறுவனங்களின் செயல்பாடுகள், நிறுவன உறவுகள், விநியோகத் தொடர்பு குறித்து முழுமையான புலனாய்வை மேற்கொள்ள நிபுணர் குழுவிலிருந்து ஒரு நிறுவனத்தை மதிப்பீட்டாளராக நியமிக்க வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் அவர்களிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்