புகைமூட்டப் பணிக்குழு ஆசியான் அளவில் விரிவடைய வேண்டும்: பிரதமர் வோங்

புகைமூட்டப் பணிக்குழு ஆசியான் அளவில் விரிவடைய வேண்டும்: பிரதமர் வோங்

படம்: ஏஎஃப்பி

15 Nov 2026 - 8:20 pm

2 mins read

புகைமூட்டத்தை ஏற்படுத்தும் தீச்சம்பவங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களை விசாரிக்கும் சிங்கப்பூர் - இந்தோனீசியக் கூட்டுப் பணிக்குழு, அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கும் வகையில் விரிவடைய வேண்டும் எனச் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்தார்.

மணிலாவில் நடைபெற்றுவரும் 49வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஓய்வுத்தள அமர்வில் அவர் உரையாற்றினார்.

கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்ட அப்பணிக்குழு, தீச்சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிவதில் ஒருங்கிணைப்பையும் தகவல் பகிர்வையும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என்று திரு வோங் குறிப்பிட்டார்.

அப்பணிக்குழு இருதரப்புத் தளமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்றார் அவர். ஆசியான் நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் தீச்சம்பவம் நேரலாம் என்பதால், தகவல்களையும் சான்றுகளையும் எளிதாகப் பகிரும் ஆசியான் அளவிலான தளமாக அது மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

காடுகளை அழிப்பதற்குத் தீவைப்பது சரியான வழியன்று என அனைத்து நிறுவனங்களுக்கும் தெளிவான செய்தியைச் சொல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அதற்கென எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுபாட்டு ஒருங்கிணைப்பு நிலையம் போன்ற அமைப்புகள் ஆசியானில் ஏற்கெனவே உள்ளன. அவற்றை வலுப்படுத்த வேண்டும். தீயை அணைப்பதைத் தாண்டி, அது மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஆசியான் செயல்பட வேண்டும்,” என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.

காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தீக்கான காரணத்தை விசாரித்து, தவறிழைக்கும் நிறுவனங்களைப் பொறுப்பேற்க வைப்பதில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

காடுகளை அழிப்பதில் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனங்கள் மீதும் தாங்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதத் தொடக்கத்தில் எல்லை தாண்டிய புகைமூட்டத் தூய்மைக்கேட்டுச் சட்டத்தைச் சிங்கப்பூர் திருத்தியது.

பருவநிலை மாற்றத்தாலும் வழக்கத்திற்கு மாறான எல் நினோ வறட்சியாலும் தீவிரமடைந்த தீயைச் சமாளிக்க அதிபர் பிரபோவோ எடுத்த முயற்சிகளுக்குத் திரு வோங் நன்றி தெரிவித்தார்.

ஆபத்தான சூழலில் அயராது உழைக்கும் இந்தோனீசிய அவசரகாலப் பணியாளர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் தமது பாராட்டுகளைக் கூறிக்கொண்ட அவர், காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் வாழ்த்து தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்