வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் வாடகை, ஜனவரி மாதத்திற்குப் பிறகு முதல்முறையாகக் குறைந்துள்ளது.
கூட்டுரிமை வீடுகளின் வாடகையும் தொடர்ந்து குறைவதாகக் கூறப்பட்டது.
சொத்துச் சந்தை இணையவாசல்களான ‘எஸ்ஆர்எக்ஸ்’, ‘99.கோ’ இரண்டும் ஜூன் 21ஆம் தேதி வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகள், வீவக வீடுகளுக்கான வாடகை மாத அடிப்படையில் 0.3 விழுக்காடு குறைந்ததாகக் கூறின.
இருப்பினும், ஆண்டு அடிப்படையில் அது 6.2 விழுக்காடு அதிகமாகப் பதிவானது.
கழக வீடுகள், கூட்டுரிமை வீடுகள் என இரு சந்தைகளிலும் வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்ததே வாடகை குறைந்ததற்குக் காரணம் என்கின்றனர் சந்தை கவனிப்பாளர்கள். வேலைச் சந்தை நலிவுற்றது இதற்கு முக்கியக் காரணம்.
இதனால், இளம் சிங்கப்பூரர்கள் சிலர் பெற்றோரின் வீட்டிலிருந்து வெளியேறி, தனியாக வாடகை வீட்டில் வசிப்பதைத் தள்ளிப்போட்டுள்ளனர். சிலர் வாடகை வீட்டைக் காலி செய்துவிட்டு மீண்டும் பெற்றோரின் இல்லத்திற்கே திரும்பியுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து நலிவுற்றிருப்பதால் வேலை அனுமதி அட்டை வைத்திருப்போரின் எண்ணிக்கையும் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவையும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
கூட்டுரிமை வீட்டுச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக வாடகை குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இரு சந்தைகளிலும் வாடகைக்கு எடுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது.
மே மாதம் வாடகைக்கு எடுக்கப்பட்ட கழக வீடுகளின் எண்ணிக்கை 13.2 விழுக்காடு குறைந்து 2,558ஆகப் பதிவானது. இவற்றில் 38.1 விழுக்காட்டு வீடுகள் நாலறை வீடுகள். மூவறை, ஐந்தறை, எக்சிகியூட்டிவ் வீடுகளின் விகிதங்கள் முறையே 35.4 விழுக்காடு, 22 விழுக்காடு, 4.5 விழுக்காடாகப் பதிவாயின.
முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீட்டு வாடகை 0.8 விழுக்காடு குறைந்த வேளையில், முதிர்ச்சியடையாத பேட்டைகளில் 0.5 விழுக்காடு அதிகரித்தது. ஆண்டு அடிப்படையில் முதிர்ச்சி அடைந்த பேட்டைகளில் 5.9 விழுக்காடும் முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் 6.9 விழுக்காடும் வீட்டு வாடகை அதிகரித்தது.
மே மாதம் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 12.2 விழுக்காடு குறைந்து 5,155ஆக இருந்தது.

