அங் மோ கியோ அவென்யூ 2ல் வரவிருக்கும் தேவைக்கேற்பக் கட்டப்படும் வீட்டுத் திட்டத்திற்கான (பிடிஓ) கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன.
இதற்கு முன்னர் கெபுன் பாரு தொடக்கப்பள்ளி அமைந்திருந்த நிலப்பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. அந்தத் தொடக்கப்பள்ளி, 2023ஆம் ஆண்டுக்கும் 2024க்கும் இடையில் இடிக்கப்பட்டது. திட்டத்தில் மொத்தம் 485 வீடுகள் உள்ளன.
அடுத்த மாதம் (பிப்ரவரி) அறிமுகம் காணவிருக்கும் பிடிஓ வீடுகளில் அவை இடம்பெறமாட்டா.
இவ்வாண்டு (2026) பிற்பகுதியில் அவை விற்பனைக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூனிலும் அக்டோபரிலும் மேலும் இரண்டு பிடிஓ வீட்டுத் திட்டங்கள் அறிமுகம் காணவிருக்கின்றன.
இவ்வாண்டு அங் மோ கியோவில் புதிய வீடுகள் விற்பனைக்கு வரும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஏற்கெனவே கூறியிருந்தது.
அந்த வட்டாரத்தில் உள்ள ஆகப் பழமையான வீடுகள் 1970களில் கட்டப்பட்டவை. அவற்றில் குடியிருந்தோர் எண்ணிக்கை 2013ல் 149,330ஆக இருந்தது. அது 2023ல் 129,030க்குக் குறைந்தது.
இளம் குடும்பத்தினர், பெற்றோருடன் அணுக்கமாய் வசிக்க ஏதுவாகப் புதிய திட்டங்களைக் கழகம் அறிமுகம் செய்துவருகிறது.
‘அங் மோ கியோ அவென்யூ 2’ திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கின. 2030ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வீடுகள் தயாராகிவிடும். கட்டுமானத் தளத்திற்கு அருகே உள்ள வீவக அறிவிப்புப் பலகையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கட்டுமானத் தளம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தில் உள்ள மேஃபிளவர் எம்ஆர்டி நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு, கிட்டத்தட்ட 1.82 ஹெக்டர் அல்லது இரண்டரை காற்பந்துத் திடலுக்கு நிகரானது.
‘அங் மோ கியோ அவென்யூ 2’ பிடிஓ திட்டம் பிளஸ் பிரிவின்கீழ் வரக்கூடும் என்று இஆர்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரி யூஜின் லிம் கருதுகிறார். கட்டுமானத் தளம் கிட்டத்தட்ட மத்திய வட்டாரத்தில் அமைந்திருப்பதையும் பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், சில்லறை வர்த்தகக் கடைகள் அருகில் இருப்பதையும் அவர் அதற்கான காரணங்களாகச் சுட்டினார்.
சொத்து இணையவாசலான மொகல் டாட் எஸ்ஜி (Mogul.sg) நிறுவனத்தின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மாக்கும் புதிய வீடுகள், பிளஸ் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படும் என்றே நினைக்கிறார்.
கடந்த ஆறு ஆண்டில் அங் மோ கியோவில் ஏறக்குறைய 3,100 வீடுகள் மட்டுமே விற்பனைக்கு விடப்பட்டன என்றும் 2020க்குப் பிறகு அறிமுகம் கண்ட சுமார் 119,000 புதிய வீடுகளில் அவை மிகக் குறைவே என்றும் அவர் கூறினார்.

