வருமான மதிப்பீட்டு விதிமுறைகளைத் தளர்த்தும் வீவக

2 mins read
1c225d17-bfca-4962-9ef7-ad80b67ef65c
திருமணப் பந்தத்தில் இணைந்து பிள்ளைப் பேறுடன் தங்களுக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ள விரும்பும் இளம் தம்பதியர் நான்கறை அல்லது ஐந்தறை வீடுகளை வாங்க, வருமான மதிப்பீட்டு விதிமுறை தளர்த்தப்படும் செயல்பாடு கைகொடுக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை (பிடிஓ) இளம் தம்பதியர் வாங்கும்போது அவர்களது வருமானத்தை மதிப்பிடும் முறை கடுமையாக இருக்காது என்றும் விதிமுறை தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இளம் தம்பதியர் கல்வி பயில்பவர்களாக இருந்தாலும் அல்லது புதிதாக வேலையில் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிடிஓ வீடு வாங்குவது அவர்களுக்கு எளிதாக்கப்படும்.

வரும் ஜூலை மாதத்தில் இருந்து வீட்டுக் கடன் வாங்க தங்களது வருமான மதிப்பீட்டைத் தம்பதியர் தள்ளிப்போடலாம்.

வீட்டுச் சாவியைப் பெறுவதற்கு முன்பு அவர்கள் வருமான மதிப்பீட்டைச் செய்துகொள்ளலாம்.

இந்த அணுகுமுறைக்குத் தகுதிபெற தம்பதியரில் ஒருவராவது முழுநேர மாணவராகவோ அல்லது தேசிய சேவையாளராகவோ இருக்க வேண்டும்.

வருமான மதிப்பீடு செய்வதற்கு முன்பு தம்பதியர் சில காலம் வேலை செய்திருப்பர். எனவே, அவர்களுக்குக் கூடுதல் வீட்டுக் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக விலையுள்ள வீடுகளை வாங்க இது வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறையை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (மார்ச் 26) அறிவித்தார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது வீடமைப்பு தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரம் உள்ள 12,000 பிடிஓ வீடுகள் 2025க்கும் 2027க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் விற்பனைக்கு விடப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையைவிட இது அதிகம். 2025ஆம் ஆண்டுக்கும் 2027ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 50,000க்கும் அதிகமான வீடுகள் விற்கப்படும்.

திருமணப் பந்தத்தில் இணைந்து பிள்ளைப் பேறுடன் தங்களுக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ள விரும்பும் இளம் தம்பதியர் நான்கறை அல்லது ஐந்தறை வீடுகளை வாங்க, வருமான மதிப்பீட்டு விதிமுறை தளர்த்தப்படும் செயல்பாடு கைகொடுக்கும் என்று திரு லீ கூறினார்.

இந்த மாற்றத்துக்கு முன்பு வருமான மதிப்பீட்டைத் தள்ளிப்போடும் அணுகுமுறைக்குத் தகுதி பெற, தம்பதியர் இருவரும் முழுநேர மாணவர்களாக அல்லது தேசிய சேவையாளர்களாக இருக்க வேண்டும்.

அல்லது வீவக இல்லத் தகுதிக் கடிதத்துக்கு விண்ணப்பிக்கும் தேதிக்கு முந்தைய 12 மாதக் காலகட்டத்தில் கல்வியை அல்லது தேசிய சேவையை முடித்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவராவது 30 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவராக இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்