புளோக் 279பி செங்காங் ஈஸ்ட் அவென்யூவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்று, ஏப்ரல் மாதத்தில் 1.06 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்காங் வட்டாரத்தில் இது முன்னெப்போதும் பதிவாகாத அதிகமான தொகை என்று ‘எட்ஜ்புரோப்.எஸ்ஜி’ இணையத்தளம் தெரிவித்தது.
அந்த வீடு உயர்மாடியில் அமைந்துள்ளது என்றும் 1,206 சதுர அடி பரப்பளவு கொண்டது என்றும் கூறப்பட்டது.
செங்காங்கில் ஏழு-இலக்கத் தொகைக்கு விற்கப்பட்ட ஐந்தாவது வீவக மறுவிற்பனை வீடு அது என்று தெரிகிறது.
உயர்மாடியில் அமைந்திருப்பது, உடனடியாகக் குடிபுகும் நிலையில் இருப்பது, ‘செங்காங் கிராண்ட் மால்’ கடைத்தொகுதி, புவாங்காக் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு மிக அருகில் அமைந்திருப்பது போன்றவை அந்த வீடு அதிக விலைக்குக் கைமாறியதற்குக் காரணங்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், இவ்வாறு அதிக விலைக்கு விற்கப்படும் வீவக மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு முந்தைய ஈராண்டுகளில் விற்பனையான நாலறை அல்லது சிறிய வீடுகள் அனைத்திலும் இத்தகைய வீடுகளின் விகிதம் 0.5 விழுக்காடு மட்டுமே என்றார் அவர். அவை அனைத்தும் உயர்மாடிகளில்,சிறந்த போக்குவரத்துத் தொடர்பு உள்ள இடங்களில், அருகில் பல்வேறு வசதிகளைக் கொண்டவையாக அமைந்திருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

