வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை கட்டுப்படியாகக் கூடியதாய் இருப்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் புதன்கிழமை (மே 28) தெரிவித்துள்ளார்.
விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக மறுவிற்பனை வீட்டு விலை உயர்ந்துள்ளதாகக் கூறிய திரு சீ, குறிப்பாக, கொவிட்-19 காலகட்டத்தில் ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீவக வீடுகளின் கட்டுமானம் மெதுவடைந்ததைச் சுட்டினார்.
“இதனால் சிலர் மறுவிற்பனைச் சந்தையை நாடத் தொடங்கினர்,” என்றார் அவர்.
எனினும், 2026 முதல் அதிக எண்ணிக்கையிலான வீடுகளின் குறைந்தபட்சக் குடியிருப்புக் காலகட்டம் நிறைவடையும் என்பதால் விநியோகம் மேம்படும் என்றும் விலைகள் சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பதவியேற்றதையடுத்து தோ பாயோ லோரோங் 1ல் அமைந்துள்ள ‘தோ பாயோ ரிட்ஜ்’ பிடிஓ அடுக்குமாடிக் குடியிருப்பை முதல்முறையாக அமைச்சர் சீ பார்வையிட்டார்.
மொத்தம் 920 வீடுகளைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 2020ல் விற்பனைக்கு விடப்பட்டது. கடந்த வாரம் வீட்டு உரிமையாளர்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கான சாவிகளை பெறத் தொடங்கினர்.
தற்போது தனியார் வீட்டு உரிமையாளர்கள் மறுவிற்பனை வீடுகளை வாங்க 15 மாதக் காத்திருப்புக் காலம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தைச் சூழ்நிலை எதிர்காலத்தில் மேம்படும்போது, இந்தக் காத்திருப்புக் காலம் மதிப்பாய்வு செய்யப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என்று அமைச்சர் சீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய தேவைகளையும் வருங்காலத் தேவைகளையும் சமாளிக்க, முன்னாள் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தொடங்கிய பணிகளைத் தொடர்ந்து, புதிய பிடிஒ வீடுகளின் விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சீ தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு முதல் 2025 வரை 100,000 பிடிஒ வீடுகளை விற்பனைக்கு விடும் இலக்கை வீவக ஏற்கெனவே எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 50,000 புதிய வீடுகளை விற்பனைக்கு விடத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு மட்டும் 19,000 குடும்பங்கள் புதிய வீடுகளுக்கான சாவிகளைப் பெறவுள்ளன.
நகர மையம் அல்லது முக்கிய வசதிகளிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பிடிஓ வீடுகளில் குடியிருப்பவர்களின் குடியேறும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், அதன் தொடர்பான நடவடிக்கைகளை ஆராய தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங்கிடம் தாம் கேட்டுகொண்டுள்ளதாகத் திரு சீ தெரிவித்தார்.
புதிய வீடுகள் கட்டப்படும் அதேவேளையில், பழைய நகரப் பேட்டைகளின் புதுப்பித்தல் பணிகளிலும் தாம் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் கூறினார்.
“அனைத்துத் தலைமுறையினரும் வசிக்கத் தக்க இடமாக நமது குடியிருப்புப் பேட்டைகள் இருக்க வேண்டும்,” என அவர் சொன்னார். இதற்குப் பல்வேறு அமைச்சுகளின் ஒன்றிணைந்த முயற்சியும் கவனமும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.
போக்குவரத்து அமைச்சிலிருந்து தற்போது தேசிய வளர்ச்சி அமைச்சுக்கு மாற்றப்பட்டதன் தொடர்பாகப் பேசிய அமைச்சர் சீ, “இரண்டு அமைச்சுகளிலும் நீண்டகாலத் திட்டமிடலும் பல்வேறு தரப்பினருடனான ஒத்துழைப்பும் அவசியம்,” என்றார் அவர்.
தம் சகாக்களுடனும், மற்ற பங்காளிகளுடனும், முக்கியமாகச் சிங்கப்பூரர்கள் அனைவருடனும் அணுக்கமாகப் பணியாற்றி, சிங்கப்பூரில் நல்ல வாழ்க்கைச் சூழலை உருவாக்க விரும்புவதாக அமைச்சர் சீ தெரிவித்தார்.