வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், 9,012 வீடுகளைப் புதன்கிழமை (பிப்ரவரி 4) விற்பனைக்கு விட்டுள்ளது.
அவற்றில் 4,692 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளும் அடங்கும். அந்த வீடுகளில் ஏறக்குறைய 1,300, தெம்பனிசிலும் செம்பவாங்கிலும் விற்பனைக்கு வரும். அவற்றுக்காகக் காத்திருக்கும் காலம், மூவாண்டுக்குக் குறைவாக இருக்கும்.
மொத்தத்தில் ஆறு தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டங்கள், புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ வட்டாரங்களில் அறிமுகம் காணும்.
எஞ்சிய வீட்டு விற்பனையின்கீழ் மேலும் 4,320 வீடுகளும் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. வீட்டை வாங்கியோர் குடிபுகுவதற்கு அவை தயாராக இருக்கின்றன.
எஞ்சிய வீடுகளில் பெரும்பாலானவை, புக்கிட் மேரா, காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன் வட்டாரங்களில் உள்ள பிரைம், பிளஸ் வகை வீடுகள். அவற்றோடு சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளும் இருக்கின்றன.
அறிமுகம் கண்டுள்ள தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுக்குக் காத்திருக்கும் காலம் நான்காண்டுக்கும் குறைவாகவே இருக்கும்.
ஜாலான் புக்கிட் மேரா, ரெட்ஹில் குளோஸ் பகுதியில் அமைந்திருக்கும் ரெட்ஹில் பீக்ஸ் எனும் ‘பிரைம்’ திட்டத்தில் 1,052 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நான்கறை வீடுகள் உள்ளன. அங்கிருந்து நடந்துசென்றால் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்தை ஐந்து நிமிடத்தில் அடைந்துவிடலாம்.
வீடுகளை வாங்குவோர் நான்கு ஆண்டு, ஏழு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மானியத்தைச் சேர்க்காமல் ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளுக்கான விலை $215,000 முதல் $373,000 வரையும் மூவறை வீட்டுக்கான விலை $385,000 முதல் $537,000 வரையும் நான்கறை வீட்டுக்கான விலை $563,000 முதல் $783,000 வரையும் இருக்கும்.
தெம்பனிஸ் சென்ட்ரலில் அமைந்திருக்கும் தெம்பனிஸ் நோவா திட்டம், ‘பிளஸ்’ பிரிவின்கீழ் வருகிறது. அதில் மொத்தம் 255 ஈரறை ஃபிளெக்ஸி, நான்கறை வீடுகள் இருக்கின்றன.
தெம்பனிஸ் அவென்யூ 5, தெம்பனிஸ் சென்ட்ரல் 8, தெம்பனிஸ் கோன்கோர்ஸ் ஆகியவற்றின் நடுவே அது அமைந்துள்ளது. தெம்பனிஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அங்கிருந்து ஐந்து நிமிடத்தில் நடந்துசென்றுவிடலாம்.
அந்த வீடுகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும் காலம் ஈராண்டு, எட்டு மாதம்.
மானியத்தைச் சேர்க்காமல் ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளுக்கான விலை $197,000 முதல் $292,000 வரையும் நான்கறை வீட்டுக்கான விலை $459,000 முதல் $602,000 வரையும் இருக்கும்.
அந்த வட்டாரத்தில் அமையவிருக்கும் மற்றொரு திட்டம் ‘தெம்பனிஸ் பிளிஸ்’. அதில் 284 மூவறை, நான்கறை வீடுகள் உள்ளன. அந்த வீடுகள், தெம்பனிஸ் அவென்யூ 2இலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 22இலும் அமைந்திருக்கின்றன. அவற்றுக்காகக் காத்திருக்கும் காலம் ஓராண்டு, 11 மாதம்.
புதிய செம்பவாங் நார்த் குடியிருப்புப் பேட்டையில் அமைந்துள்ளது செம்பவாங் டெக் திட்டம். அதில் 777 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நான்கறை, ஐந்தறை வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்காகக் காத்திருக்கும் காலம் ஈராண்டு, ஒன்பது மாதம்.
மானியத்தைச் சேர்க்காமல் ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளுக்கான விலை $158,000 முதல் $237,000 வரையும் மூவறை வீட்டுக்கான விலை $261,000 முதல் $343,000 வரையும் நான்கறை வீட்டுக்கான விலை $338,000 to $426,000 வரையும் ஐந்தறை வீட்டுக்கான விலை $479,000 முதல் $585,000 வரையும் இருக்கும்.
தோ பாயோவில் கிம் கியெட் கிரெஸ்ட் திட்டத்தில் மொத்தம் 1,151 ஈரறை ஃபிளெக்ஸி, மூவறை, நான்கறை உள்ளன. பிளஸ் திட்டமான அது, கிம் கியெட் அவென்யூவிலும் தோ பாயோ ஈஸ்ட்டிலும் அமைந்துள்ளது. அந்த வீடுகளுக்காகக் காத்திருக்கும் காலம் மூவாண்டு, ஒரு மாதம்.
வீடுகளை வாங்க விரும்புவோர், வீவக அடுக்குமாடி இணையத்தளத்தில் (HDB Flat Portal) பிப்ரவரி 11ஆம் தேதி இரவு மணி 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
வீவகவின் அடுத்த தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீட்டுத் திட்டம், ஜூன் மாதம் அறிமுகம் காணும். அதில் அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, செம்பவாங், உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் ஏறக்குறைய 6,900 வீடுகளை விற்பனைக்கு விடும்.

