தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் புதிதாக 7,000 வீடுகள் விற்பனை

2 mins read
99d3eb0a-fb0a-4e1b-a966-45ae862e93d0
படம்: வீவக -

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பல்வேறு பேட்டைகளில் கிட்டத்தட்ட 7,000 வீடுகளை நேற்று விற்பனைக்கு விட்டது. இவற்றில் 1,500 வீடுகள் எஞ்சிய வீடுகளின் விற்பனைப் பட்டியலில் உள்ளவை.

ஐந்து வீடமைப்புத் திட்டங்களுக்கு உட்பட்ட 5,495 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகளும் விற்பனைக்கு வந்தவற்றுள் அடங்கும்.

முதிர்ச்சியடைந்த பேட்டைகளான பிடோக், காலாங்/வாம்போ மற்றும் சிராங்கூன் வட்டாரங்களில் அமல்படுத்தப்பட்ட பிடிஓ திட்டங்கள் அவை.

இதர இரண்டு திட்டங்கள் முதிர்ச்சியடையாத தெங்கா வீடமைப்புப் பேட்டைக்குரியவை. விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகளில் 90 விழுக்காட்டுக்கான காத்திருப்புக் காலம் நான்காண்டுகளுக்கும் குறைவு.

அதேநேரம் ஐந்து பிடிஓ திட்டங்களில் நான்கிற்கான காத்திருப்புக் காலம் மூன்றாண்டு ஒரு மாதம் முதல் மூன்றாண்டு எட்டு மாதம் வரை இருக்கும் என்று வீவக நேற்று தெரிவித்தது.

விற்பனைக்கு விடப்பட்டுள்ள வட்டாரங்களில் பிடோக் மற்றும் சிராங்கூன் வீடுகளுக்கு வலுவான தேவை இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக அது கூறியது.

பிடோக்கில் இதற்கு முன்னர் 2016 நவம்பரில் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அதேபோல சிராங்கூனில் 2014 ஜனவரியில் மூத்தோருக்கான 150 ஸ்டூடியோ வீடுகளுக்கான விற்பனை நடைபெற்றது.

தற்போது விற்பனைக்கு வந்துள்ளவற்றில் 1,640 வீடுகள் பிடோக் சவுத் பிளாசம் திட்டத்தில் இடம்பெற்றுள்ளவை. தானா மேரா எம்ஆர்டி நிலையத்தின் அருகிலுள்ள தளத்தில் அந்த வீடுகள் இடம்பெறும். பிடோக் சவுத் ரோடு மற்றும் பிடோக் சவுத் அவென்யூ 3 ஆகிய பகுதிகளால் சூழப்பட்ட பகுதி அது.

புதிய வீடுகளுக்கான விலை விவரங்களையும் கழகம் வெளியிட்டுள்ளது. பிடோக் சவுத் பிளாசம் ஐந்தறை வீடுகளுக்கான விலை $588,000 முதல் $737,000 வரையிலும் நான்கறை வீடுகளின் விலை $488,000 முதல் $587,000 வரையிலும் இருக்கும். அதேபோல, மூவறை வீடுகளின் விலை $320,000க்கும் $396,000க்கும் இடைப்பட்டு இருக்கும் என்றது கழகம்.

குறிப்புச் சொற்கள்