வீவக மறுவிற்பனை வீட்டு விலை 0.1% சரிவு; விற்பனை அதிகரிப்பு

வீவக மறுவிற்பனை வீட்டு விலை 0.1% சரிவு; விற்பனை அதிகரிப்பு

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Oct 2026 - 2:55 pm

2 mins read

2026ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 0.1 விழுக்காடு குறைந்துள்ளது.

தனியார் சொத்து உரிமையாளர்கள் வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த 15 மாதக் காத்திருப்பு காலம் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீடுகளின் விற்பனை பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) வீவக வெளியிட்ட தரவுகளின்படி, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7,645 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.

இது முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் 19.5 விழுக்காடும் கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்புநோக்கையில் 5.9 விழுக்காடும் அதிகம்.

சந்தை நிலவரம் சீரடைந்ததால் வீவக மறுவிற்பனை வீடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்திருந்தார்.

தளர்வுகளுக்குப் பின் தனியார் வீடுகளில் இருந்து சிறிய வீடுகளுக்கு மாறுவோரால் ஐந்து அறை வீடுகள் 26.7 விழுக்காடும் எக்சிகியூட்டிவ் வீடுகள் 41.6 விழுக்காடும் விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டன.

வீடுகளின் மறுவிற்பனை விலை குறைந்ததால், $1மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட விலையுள்ள வீடுகளின் விற்பனை 596ஆக உயர்ந்தது.

அவற்றில் 50 விழுக்காடு வீடுகள் 15 ஆண்டுகள் அல்லது அதற்குட்பட்டவை. சிராங்கூனில் உள்ள எக்சிகியூட்டிவ் வீடு அதிகபட்சமாக $1.13 மில்லியனுக்கு விற்பனையானது. குவீன்ஸ்டவுனில் உள்ள நான்கறை வீடுகள் சராசரியாக 1,065,000 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டன.

தனியார் வீட்டுச் சந்தையில் விலை 1.4 விழுக்காடு உயர்ந்த போதிலும், ஒட்டுமொத்த வீடு விற்பனை எண்ணிக்கை 16.3 விழுக்காடு சரிந்து 5,146 வீடுகளாகக் குறைந்தது.

கடந்த காலாண்டில் 6,148 தனியார் வீடுகள் விற்பனை ஆகின.

ஏழாவது சந்திர மாதத்தின் காரணமாக புதிய தனியார் வீடுகளின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், புதிய திட்டங்களின் அறிமுகத்தால் நான்காம் காலாண்டில் தனியார் வீட்டுச் சந்தை மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் மாதத்தில் பிடோக், கேலாங், செம்பவாங், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய பகுதிகளில் ஏறக்குறைய 7,960 புதிய வீடுகளை வெளியிட வீவக திட்டமிட்டுள்ளது.

அத்துடன், தோ பாயோவில் முதியோருக்கான சிறப்புப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகளும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்