வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலைகள் கடந்த ஆண்டில் (2025) 2.9 விழுக்காடு கூடின. 2019க்குப் பிறகு, அதுவே ஆக மெதுவான உயர்வு.
ஒப்புநோக்க, 2024ல் மறுவிற்பனை வீடுகளின் விலையேற்ற வேகம் 9.7 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
2025இன் கடைசிக் காலாண்டில் வீவக மறுவிற்பனை வீடுகளின் விலைகள், 2020இன் முதல் காலாண்டுக்குப் பிறகு முதன்முறையாக மாற்றமின்றி இருந்தன.
வீவக வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்களைத் தந்திருந்தது.
மறுவிற்பனை விலைகள், 2020ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிலிருந்து மூன்று மாத அடிப்படையில் தொடர்ந்து உயர்ந்துவந்தன.
மறுவிற்பனை வீட்டு விலைகள் நான்கு காலாண்டாகத் தொடர்ந்து மெதுவான உயர்வைக் கண்டுவந்தன. அதன் பிறகு இப்போது நான்காம் காலாண்டுக்கான முன்னோடி மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
2025இன் இரண்டாம், மூன்றாம், நான்காம் காலாண்டுகளிலும் மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தது.
ஆண்டு அடிப்படையில் 2025இன் நான்காம் காலாண்டில் குறைவான மறுவிற்பனை வீடுகளே கைமாறின. 2024ன் கடைசிக் காலாண்டில் அத்தகைய 6,314 வீடுகள் விற்பனையாயின. ஒப்புநோக்க, கடந்த காலாண்டில் விற்கப்பட்ட மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 18.8 விழுக்காடு குறைந்து 5,129 ஆனது.
தொடர்புடைய செய்திகள்
2025 முழுமைக்கும் பார்க்கும்போது டிசம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, கைமாறிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 26,042. 2024ல் விற்பனையான அத்தகைய 28,876 வீடுகளைக் காட்டிலும் அது 9.8 விழுக்காடு குறைவு.
“அரசாங்கம் சொத்துச் சந்தையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிக்கும். நிலையான, நீடிக்கக்கூடிய சொத்துச் சந்தையை ஊக்குவிக்க, கொள்கைகளில் தேவையான மாற்றங்களையும் அது செய்யும்,” என்று வீவக தெரிவித்தது.
வரும் பிப்ரவரி மாதம், புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ வட்டாரங்களில் கிட்டத்தட்ட 4,600 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளை வீவக அறிமுகம் செய்யவிருக்கிறது.
எஞ்சிய வீடுகளின் விற்பனைத் திட்டத்தின்கீழ் மேலும் ஏறக்குறைய 3,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

