மாஜு வனப்பகுதி, கில்மன் பேரெக்ஸ் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவிருந்த குடியிருப்பு மறுமேம்பாட்டுத் திட்டங்களில் கூடுதல் பசுமைப் பகுதிகள் பாதுகாக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 9,500 கருத்துகள், சுற்றுச்சூழல் ஆய்வுகளின் முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) இந்த மாற்றங்களைச் செய்துள்ளதாகப் புதன்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்தது.
தேசிய வளர்ச்சி அமைச்சுக் கட்டடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஆல்வின் டான், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் மக்களின் வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இடையே சரியான சமநிலையைக் கண்டறிய அரசாங்கம் தீவிர முயற்சி செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கட்டடங்கள் கட்டப்படும் பரப்பளவு குறைக்கப்பட்டு, கூடுதல் இயற்கை நிலங்கள் பாதுகாக்கப்படும். அதேவேளையில், இவ்விரு பகுதிகளிலும் அடுத்த பத்தாண்டுகளில் மொத்தம் ஏறத்தாழ 11,000 புதிய வீடுகள் கட்டப்படும்.
பொதுமக்களின் கருத்துகள்
இவ்வாண்டு ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை நடத்தப்பட்ட அதிகாரபூர்வ கலந்தாலோசனையின்போது 9,500க்கும் அதிகமான கருத்துகள் கழகத்திற்கு அனுப்பப்பட்டன.
மாஜு வனப்பகுதி தொடர்பாக 7,200 கருத்துகளும், கில்மன் பேரெக்ஸ் தொடர்பாக 2,300 கருத்துகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
காடுகள் அழிக்கப்படுவதால் பல்லுயிர்ச் சூழல் பாதிப்படையும் என இயற்கை ஆர்வலர்களும் வட்டாரவாசிகளும் கவலை தெரிவித்தனர். மாற்று நிலங்களை ஆராயுமாறும் அவர்கள் வலியுறுத்தினர். இக்கருத்துகளைப் பரிசீலித்த அரசு அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆய்வுகளின் முடிவுகளுக்கு ஏற்பத் திட்டங்களை மறுஆய்வு செய்தன.
வீடுகளின் எண்ணிக்கையில் மாற்றம்
கூடுதல் பசுமைப் பகுதிகள் பாதுகாக்கப்படுவதால், மாஜு வனப்பகுதியில் தொடக்கத்தில் கணிக்கப்பட்டதைவிட ஏறத்தாழ 400 வீடுகள் குறைவாகக் கட்டப்படும். கில்மன் பேரெக்ஸில் ஏறத்தாழ 800 வீடுகள் குறையும்.
“சிங்கப்பூரர்களுக்குப் போதிய வீடுகளை வழங்குவதையும் கூடுதல் பசுமை நிலங்களைப் பாதுகாப்பதையும் உறுதிசெய்ய, சாத்தியமான இடங்களில் உயரமான அடுக்குமாடிக் கட்டடங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளோம்,” என்று திரு டான் தெரிவித்தார்.
மறுஆய்வு செய்யப்பட்ட இத்திட்டத்தின்படி, மாஜு வனப்பகுதியில் ஏறத்தாழ 4,000 பொது வீடமைப்பு வீடுகளும், கில்மன் பேரெக்ஸில் 5,500 பொது வீடுகள் உட்பட மொத்தம் 7,000 வீடுகளும் அமைக்கப்படும்.
பசுமைப் பகுதிகளும் மரபுடைமைக் கட்டடங்களும்
23 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மாஜு வனப்பகுதியில் (சன்செட் வே) பாதுகாக்கப்படும் பசுமை நிலம் 8 ஹெக்டரிலிருந்து 10 ஹெக்டராக உயர்த்தப்பட்டுள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 45 விழுக்காடாகும். இப்பகுதியை தேசியப் பூங்காக் கழகம் புதிய ‘இயற்கை பூங்கா’வாகப் (Nature Park) பராமரிக்கும்.
கில்மன் பேரெக்ஸ் பகுதியில் பாதுகாக்கப்படும் பசுமை நிலம் 8 ஹெக்டரிலிருந்து 12 ஹெக்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் 20 ஹெக்டர் பசுமை நிலத்தில் இது 60 விழுக்காடாகும்.
இப்பகுதி புதிதாக அமையவுள்ள அலெக்சாண்ட்ரா இயற்கை பூங்காவுடன் இணைக்கப்படும். மேலும், அங்குள்ள 25 மரபுடைமைக் கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டு, வணிக, சமூகப் பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.
வீட்டுத் தேவைகளும் நிலப் பயன்பாடும்
மத்திய வட்டாரங்களில் பெற்றோருக்கு அருகில் வசிக்க விரும்பும் இளம் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் திரு டான் சுட்டிக்காட்டினார். இதனால் வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரின் நிலவளம் குறித்துப் பேசிய அவர், “நம்மிடம் குறைந்த அளவிலான நிலமே உள்ளது. வீடமைப்பு, போக்குவரத்து, வர்த்தகம், தற்காப்பு போன்ற வெவ்வேறு தேவைகளுக்கு இடையே நிலத்தைப் பகிர்ந்துகொள்வதே சிங்கப்பூரின் வரலாறு,” என்றார்.
“வெவ்வேறு தரப்பினரின் கருத்துகளை ஏற்றுச் சரியான சமநிலையைக் காண்பது எளிதான காரியமன்று. தற்போதைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் சிறந்த பயனை அளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்திருப்பதாக நம்புகிறோம்,” என்று திரு டான் மேலும் கூறினார்.
அரசாங்கம் கிம் மோ, மவுன்ட் சினாய், டோவர் போன்ற பிற மாற்று இடங்களையும் ஆய்வு செய்தது. ஆனால், அப்பகுதிகள் ஏற்கெனவே மேம்பாட்டில் உள்ளன அல்லது பிற தேசியத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ராணுவ முகாம்களும் தற்போதைக்குத் தேவைப்படுவதால் இவற்றுக்கு மாற்றாகப் பயன்படுத்த இயலாது என தெரிவிக்கப்பட்டது.
கில்மன் பேரெக்ஸில் 2027ன் பிற்பகுதியில் கட்டடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கும். 2029ல் நிலத்தைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பமாகும்.
மாஜு வனப்பகுதியில் 2028ன் முற்பகுதியில் நிலத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.
