வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 5,000 தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை விற்பனைக்கு வெளியிடுகிறது.
தஞ்சோங் ரூவில் கட்டப்படும் மூன்றாவது பிடிஓ திட்டமும் கடலோரமாக உட்லண்ட்சில் கட்டப்படும் 1,500 வீடுகளும் இவற்றில் அடங்கும்.
மொத்தம் ஐந்து வீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் வீடுகள் பிப்ரவரியில் விற்பனைக்கு வரும்.
செஞ்சாருவில் உள்ள இரண்டு வீட்டுத் திட்டங்களும் ஈசூனில் வரவிருக்கின்ற வீவக குடியிருப்பு வட்டாரமும் குவின்ஸ்டவுனில் மெய் சின் ரோட்டில் உள்ள வீடுகளும் இதில் விற்பனைக்கு வருவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டின் முதல் பிடிஓ வீட்டு விற்பனையில் தொடங்கப்படும் ஐந்து திட்டங்களின் விவரங்களை புதன்கிழமை (அக்டோபர் 16) தனது இணையத் தளத்தில் வீவக வெளியிட்டது.
காலாங்/வாம்போ, குவின்ஸ்டவுன், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய இடங்களில் கட்டப்படும் ஏறக்குறைய 5,000 வீடுகள் விற்பனைக்கு வருகின்றன.
தங்சோங் ரூவில் உள்ள வீட்டுத் திட்டம், காலாங்/வாம்போ வட்டாரத்திற்குள் வருகிறது. இங்கு, ஈரறை ஃபிளக்சி வீடுகள், மூவறை, நான்கறை வீடுகள் உட்பட 800 வீடுகள் கட்டப்படுகின்றன. கேலாங் ஆற்றுக்கு அருகே தஞ்சோங் ரூ ரோட்டில் கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டம், டன்மன் உயர்நிலைப் பள்ளி மற்றும் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் தஞ்சோங் ரூ, காத்தோங் பார்க் ஆகிய இரண்டு எம்ஆர்டி நிலையங்களுக்கு அருகே அமைந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், வட்டப் பாதையில் உள்ள ஸ்டேடியம், மவுண்ட் பேட்டன் எம்ஆர்டி நிலையங்களும் எட்டும் தொலைவில் இருக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த நிலையில் தஞ்சோங் ரூ வீட்டுத் திட்டம், அண்மையில் வீவக வகைப்படுத்திய ‘பிரைம்’ பிரிவில் இடம்பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சொத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நகர மையத்திலும் பல எம்ஆர்டி நிலையங்களுக்கு மத்தியிலும் அது இடம்பெற்று இருப்பதால் பிரபலமாக விளங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
‘புரோப்நெக்ஸ்’ ஆய்வு, உள்ளடக்கப் பிரிவின் தலைவரான திருவாட்டி வோங் சியவ் யிங், வீட்டிலிருந்தவாறே கேலாங் ஆறு, சிங்கப்பூர் விளையாட்டு மையம் மற்றும் மரினா ஈஸ்ட்டை ரசிக்க முடியும் என்றார்.
ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தரவுப் பகுப்பாய்வின் மூத்த இயக்குநரான லீ சே டெக், இந்தத் திட்டத்திற்கு அதிக அளவில் விண்ணப்பங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
முந்தைய இரண்டு திட்டங்களில் வீடு கிடைக்காதவர்கள் இதற்கு விண்ணப்பித்து முயற்சி செய்யலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
கடந்த ஜூன் மாதம், கேலாங் ஆற்றுக்கு நெருக்கமாக கம்போங் அராங் ரோட்டில் கட்டப்படும் தஞ்சோங் ரூ ‘ரிவர்ஃபிரண்ட் I’, ‘ரிவர்ஃபிரண்ட் II’ ஆகிய இரண்டு பிடிஓ திட்டங்களின் வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.
பொது வீடமைப்பு வடிவமைப்பில் முதன்மை வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் திட்டத்தின் நான்கறை வீடுகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஒரு வீட்டுக்காக முதல் முறையாக வீடு வாங்குவோரின் இரண்டு விண்ணப்பங்கள் வந்திருந்தன. ஆனால் மூவறை வீடுகளுக்கு அவ்வளவு விண்ணப்பங்கள் வரவில்லை.