தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதால் ஏற்படும் திறனிழப்பைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகத் தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம் (என்யுஎச்எஸ்) கடந்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அற்ற நேரங்களை மருத்துவர்களுக்கு உருவாக்கியது.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் (என்எச்ஜி ஹெல்த்), இதே போன்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
இந்த ‘ஏஐ அற்ற’ காலங்களில், சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ வேலை அல்லது மதிப்பீடுகளைச் செய்யச் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதில்லை.
மருத்துவர்களைக் கண்காணித்தல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் அபாயங்களைப் பற்றி மருத்துவ மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் கற்பித்தல் ஆகியவை திறனிழப்பைத் தடுப்பதற்கான பிற சாத்தியமான வழிகள்.
பெருங்குடலில் புற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சியைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு உதவியைப் பயன்படுத்திய சில மாதங்களிலேயே, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் ஏஐ உதவியின்றி புற்றுநோய் அறிகுறிகளைத் திறமையாகக் கண்டறிய முடியவில்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்தியது.
‘லான்செட் கேஸ்ட்ரோஎன்ட்ரோலஜி அண்ட் ஹெப்படோலஜி’ (The Lancet Gastroenterology And Hepatology) என்ற இரைப்பை குடல், கல்லீரல் மருத்துவ சஞ்சிகையின் ஆகஸ்ட் 2025 இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, போலந்தில் உள்ள நான்கு எண்டோஸ்கோபி மையங்களில் மருத்துவர்கள் கட்டிகளைக் கண்டுபிடிக்க ஏஐ கருவியைப் பயன்படுத்துகிறார்கள். அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மருத்துவர்கள் கட்டியின் வளர்ச்சியைக் கிட்டத்தட்ட 28 விழுக்காடு பரிசோதனைகளில் கண்டறிந்தனர். ஆனால், ஏஐ கருவி பயன்பாட்டுக்குப் பின்னர் அந்த விகிதம் கிட்டத்தட்ட 22 விழுக்காடாகக் குறைந்தது.
சிங்கப்பூர் மக்கள்தொகை விரைவாக அதிகரித்து வருவதால், சுகாதார சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பொதுச் சுகாதாரத் துறையில் விரைவான, துல்லியமான நோய் பரிசோதனைக்கும் ஆரம்ப தலையீட்டுக்கான நோய் குறித்த பகுப்பாய்வுக்கும், வழக்கமான பணிகளைத் தானியங்கி மயமாக்கவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
என்யுஎச்எஸ்-இன் ஏஐ அலுவலகத்தின் தலைவரான துணைப் பேராசிரியர் நியம் கீ யுவான், செயற்கை நுண்ணறிவை கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான தேவையை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். அதேவேளையில், ஆய்வு சில வரையறைகளுடன் ஒரு குறிப்பிட்ட ஆய்வை மட்டுமே பிரதிபலிப்பதாகவும் அதனால் மருத்துவர்களின் திறன்களை ஏஐ பலவீனப்படுத்துகிறது என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆய்வு வரம்புகளுக்கு உட்பட்டது என்றபோதிலும் கடந்த ஆண்டில் குழுமம் உருவாக்கிய மருத்துவர்களின் செயல்திறனை தக்கவைத்துக்கொள்ள, ‘ஏஐ-அற்ற’ நேரத்தைக் குழுமம் நடைமுறைப்படுத்தியுள்ளதைச் சுட்டினார்.
2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அக்குழுமம் சில எண்டோஸ்கோபிக் நடைமுறைகளின் போது கட்டிகளை அடையாளம் காண ஏஐ- பயன்பாடுள்ள அமைப்பை உருவாக்கியது. இவ்வாறு ஏப்ரல் 2025இல், மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கவும் 2023ல் நாள்பட்ட நோய் உள்ளோர் தங்களின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்ற உடல்நலக் குறியீடுகளைக் கண்காணிப்பதற்கும் ஏஐ பயன்பட்டை அறிமுகப்படுத்தியது.