சிங்கப்பூருக்கும் ஹாங்காங்குக்கும் அவ்வப்போது போட்டி இருப்பது நன்மை அளிக்கும் ஒன்று என்றும் அதன் மூலம் உலக வர்த்தகம் பலனடையும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) கூறினார்.
ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீயைச் சந்தித்த பிரதமர் வோங், பல்வேறு அம்சங்களில் இரு நகரங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகவும் இவற்றுக்கு இடையிலான தொடர்புகள் முன்பு இருந்ததைவிட முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“அந்தந்த வட்டாரங்களுக்கு (இந்நகரங்கள்) மையங்களாக விளங்குகின்றன. இரண்டுக்கும் இடையே அவ்வப்போது போட்டி இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டி என்றே நான் நினைக்கிறேன். இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது என்னவென்றால், இந்நகரங்கள் இணைந்து செயல்படும்போது பங்களிக்கும் ஆற்றல் அதிகரிக்கும், இருதரப்பும் பலனடையும். இருதரப்பும் தடையற்ற வர்த்தகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது, விதிமுறைகளை மையமாகக் கொண்ட பன்முகக் கட்டமைப்பை விரும்புவது ஆகியவை அதற்குக் காரணங்கள்,” என்று திரு வோங் விவரித்தார்.
விரிசல்களும் தடைகளும் அதிகரித்துவரும் உலகில் இரு நகரங்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்றையும்விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாகவும் திரு வோங் சுட்டினார். ஹாங்காங்குடன் மேலும் நெருக்கமாக ஒத்துழைக்க சிங்கப்பூர் விரும்புவதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.
இப்பயணம், பிரதமராகப் பதவியேற்ற பிறகு திரு வோங் ஹாங்காங்குக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணமாகும். இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு அவர் ஹாங்காங்குக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார். மீண்டும் ஹாங்காங்குக்குச் சென்றதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாகத் திரு வோங் கூறினார்.
“ஹாங்காங்கில் பல நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன,” என்றார் அவர். ஹாங்காங்கின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தாம் ஆவலாய் இருப்பதாகத் திரு வோங் கூறினார்.
“ஹாங்காங் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதையும் அந்த வாய்ப்புகளில் சிங்கப்பூர் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதையும் அறிய விரும்புகிறேன்,” என்றார் அவர்.
சுற்றுப்பயணம், ஆய்வு, புத்தாக்கம், இளையர், சமூகத் தொடர்பு போன்ற புதிய, வளர்ந்துவரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துபேசியதாக வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.

