ஒரு சில கட்டுமான ஊழியர்கள் குளிர்ந்த பருவநிலையில் தொழில்சார் வெப்ப வரம்புகளைத் தாண்டி கடினமாக வேலை செய்துகொண்டிருக்கலாம் என்பதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் வெப்பமான மற்றும் குளிரான மாதங்களில் கிட்டத்தட்ட 160 கட்டுமான ஊழியர்களிடமிருந்து வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களைச் சேகரித்த பிறகு இதைக் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் சிங்கப்பூரில் எல்லாக் காலங்களிலும் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றெனவும் இது வெப்பமான காலங்களில் மட்டும் ஏற்படக் கூடிய பாதிப்பில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறினர்.
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டின் எல்லா மாதங்களிலும் ஏற்படக் கூடியது என இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் முதலாளிகளும் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஊழியர்கள் தங்களுக்குக் கிடைக்கும் உணவு இடைவெளி நேரங்களில் கூட ஓய்வு எடுக்காமால் வேலை செய்கின்றனர் எனவும் தங்கள் வேலைகளை முடித்த பின்னரே அவர்கள் ஓய்வெடுக்கச் செல்கின்றனர் எனவும் என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் வெப்ப மீள்தன்மை, செயல்திறன் நிலைய இயக்குனர் ஜேசன் லீ குறிப்பிட்டார்.
“உடல் உழைப்பைக் கொண்டு வேலை செய்வோர் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது கட்டுமான நிறுவனங்களுக்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் நாங்கள் வழங்கும் செய்தி,” எனப் பேராசிரியர் லீ கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் மக்களின் ஆரோக்கியத்தையும் உற்பத்தித் திறனையும் உயர்ந்து வரும் வெப்பநிலை எப்படி பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும் ‘ஹீட்சேஃப்’ எனும் என்யுஎஸ் திட்டத்தை திரு லீ வழிநடத்துகிறார்.