செந்தோசாவிலும் சிங்கப்பூர் முழுவதும் மேலும் அணுக்கமாகப் பரிசோதிக்கப்படும் மரங்கள்

செந்தோசாவிலும் சிங்கப்பூர் முழுவதும் மேலும் அணுக்கமாகப் பரிசோதிக்கப்படும் மரங்கள்

2 mins read
58ce89e4-2063-4f17-86b3-5fdf5c87585e
கன்னர் லேனில் உள்ள சாலையில் மே 28ஆம் தேதி மாலை 6 மணியளவில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. - படங்கள்: ரோட்ஸ்.எஸ்ஜி/ஃபேஸ்புக்

பருவநிலை மாற்றத்துக்கிடையே அண்மைய மாதங்களில் மழைப்பொழிவும் மோசமான வானிலை நிலவும் சம்பவங்களும் அதிகரித்ததை அடுத்து, செந்தோசா உட்பட சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம், மரங்களைப் பரிசோதித்தல், கிளைகளைக் கத்தரித்து சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பாகப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளிலும் மரங்கள் பலத்த காற்றுக்கு உள்ளாகும் பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

செந்தோசாவில் இந்த ஆண்டு (2024) மரங்கள் வேரோடு சாய்ந்த நான்கு சம்பவங்களும் கிளைகள் முறிந்து விழுந்த 11 சம்பவங்களும் பதிவானதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகப் பேச்சாளர் தெரிவித்தார். மோசமான வானிலையும் பலத்த மழையும் இவற்றுக்குக் காரணம் என்றார் அவர்.

மே 28ஆம் தேதி கன்னர் லேனில் உள்ள ஒரு சாலையில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததை அவர் குறிப்பிட்டார். சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. பொருட்சேதமும் இல்லை என்றார் அவர்.

பருவநிலை மாற்றத்தால் மரங்கள் வேரோடு சாயும் சம்பவங்களும் கிளைகள் முறியும் சம்பவங்களும் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மரங்களைப் பரிசோதிப்பதில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகக் கழகப் பேச்சாளர் கூறினார். மரங்களின் அசைவு, நிலைத்தன்மை ஆகியவற்றைக் கண்காணிக்க மரம் சாய்ந்திருப்பதைக் கண்டறியும் உணர் கருவிகள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

ஒரு மரம் லேசாக சாயத் தொடங்கியதுமே படிப்படியாக சில ஆண்டுகளில் அது விழுவதற்கான சாத்தியத்தை இந்த உணர் கருவிகள் கண்டறியும்.

முன்கூட்டியே கண்டறிவதால் மண்ணை உறுதிசெய்தல், மரக்கிளைகளைக் கழித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும்.

மற்றோர் உத்தியாக, உள்ளூர்ப் பருவநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய மர வகைகள் அதிக எண்ணிக்கையில் நடப்படுகின்றன.

தேசியப் பூங்காக் கழகம், 2000ஆம் ஆண்டு முதல், பொது இடங்களில் உள்ள மரங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு மரங்களால் இடையூறு ஏற்பட்ட 140 சம்பவங்கள் பதிவானதாக அதன் பேச்சாளர் கூறினார். சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட ஏழு மில்லியன் மரங்களில் ஏறக்குறைய ஆறு மில்லியன் மரங்களை தேசியப் பூங்காக் கழகம் நிர்வகித்துவருகிறது.

கம்பியில்லா உணர் கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரங்களைப் பரிசோதிப்பதுடன் நோய்வாய்ப்பட்ட மரங்களை அகற்றிவிட்டு வேறு மரங்களை நடும் முறையைக் கழகம் பின்பற்றுகிறது.

குறிப்புச் சொற்கள்