சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அவ்வப்போது குறுகிய நேரத்துக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. காலையில் பின்னேரத்திலும் பிற்பகலிலும் பெரும்பாலான நாள்களில் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) குறிப்பிட்டது.
சுமத்ராவில் ஏற்படும் புயலால் ஒருசில நாள்களுக்குச் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் அதிகாலையிலும் காலையிலும் ஏற்படலாம்.
பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசிலிருந்து 34 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும். ஒருசில நாள்களின் இரவு நேரங்களில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியசுக்கு மேல் நீடிக்கக்கூடும்.
ஆகஸ்ட் மாதத்தில் ஆக அதிகமாக 13ஆம் தேதி பாசிர் லாபாவில் 78.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. சுமத்ராவில் ஏற்பட்ட புயலை அடுத்து சிங்கப்பூரில் மழை பெய்தது.
இம்மாதத்தின் முதல் பாதியில் பல நாள்கள் சற்று வெப்பமாக இருந்தன. பாய லேபாரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகபட்சமாக 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இதற்குமுன் 2016ஆம் ஆண்டு சிலேத்தாரிலும் 2020ஆம் ஆண்டு அட்மிரல்டியிலும் ஆக அதிகமாக 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகின.
இம்மாத முற்பாதியில் ஜூரோங்கில் வழக்கத்தைவிட 80 விழுக்காட்டுக்கும் கூடுதலாக மழை பெய்தது. சோமர்செட்டில் வழக்கத்தைவிட குறைவாக 49 விழுக்காடு மழை மட்டுமே பெய்தது.