வியாழக்கிழமை (மார்ச் 20) பிற்பகல் சிங்கப்பூரெங்கும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது.
இதன் காரணமாக வர்த்தகங்கள், வெளிப்புற நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப், செந்தோசாவில் உள்ள கடற்கரைகள் போன்ற இடங்களில் காணப்படும் வழக்கமான நடவடிக்கைகள் தடைப்பட்டன.
சிங்கப்பூர் ஐலண்ட் கன்ட்ரி கிளப், கெப்பல், செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள குழிப்பந்து (கோல்ஃப்) மைதானங்கள் மார்ச் 19, 20ஆம் தேதிகளில் மூடப்பட்டன.
வியாழக்கிழமையன்று லகுனா நேஷனல் கோல்ஃப் ரிசோர்ட் கிளப்பில் நடைபெற இருந்த போர்ஷே சிங்கப்பூர் கிளாசிக் குழிப்பந்துப் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இப்போட்டி இனி வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
செந்தோசா கடற்கரைகளில் வழக்கமாகக் கூடும் நீர் விளையாட்டு ஆர்வலர்களைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடற்கரைகள் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடிக் கிடந்ததாக அங்குள்ள கிளப்களின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர் கனமழையால் உணவு, பானத்துறையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
சில நீச்சல் பயிற்சி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டன.
பயணிகளுக்கும் மழை கருணை காட்டவில்லை.
வியாழக்கிழமையன்று உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் டெய்ரி ஃபார்ம் சாலை நுழைவாயிலுக்கும் முன்பு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணம் தடைப்பட்டது.
சாங்கி விமான நிலையத்திலும் சிலேத்தார் விமான நிலையத்திலும் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில விமானச் சேவைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டன. வேறு சில விமானங்கள் வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டன.
சிங்கப்பூரில் முக்கியச் சின்னங்களான பின்னக்கல் எட் டக்ஸ்டன் போன்ற கட்டடங்களுக்கு அருகிலும் மத்திய வர்த்தக வட்டாரத்தின் சில பகுதிகளில் மேகங்கள் நிலத்துக்கு அருகில் சுழன்றுகொண்டிருந்ததைக் காட்டும் படங்களை இணையவாசிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்து பகிர்ந்துகொண்டனர்.
பிற்பகல் 12.45 மணிக்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
புதன்கிழமை இரவு முழுவதும் மழை இடைவிடாது பெய்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல வியாழக்கிழமை முழுவதும் பல வட்டாரங்களில் கனமழை தொடர்ந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் முன்பு வெள்ளம் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.
அவற்றில் ஒன்று, 2024ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதியன்று பெல்மோரல் கிரசெண்ட்டில் உள்ள கீழ்த்தள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைக் காட்டும் காணொளி ஆகும்.
காணொளிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் அதைப் பகிர்வதைத் தவிர்க்கும்படி பொதுமக்களிடம் கழகம் கேட்டுக்கொண்டது.
குழப்பத்தையும் தேவையில்லாப் பீதியையும் இது தவிர்க்க உதவும் என்று அது கூறியது.
சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வியாழக்கிழமை காலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தெம்பனிஸ் விரைவுச்சாலையை அடுத்து, சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று காலை 7.40 மணி அளவில் கழகம் தெரிவித்தது.
சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில், தானா மேரா கோஸ்ட் சாலை நுழைவாயிலில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் காவை 10.20 மணிக்குக் கழகம் எச்சரிக்கை விடுத்தது.
ஜாலான் சீவியூ மற்றும் மவுண்ட்பேட்டன் சாலைக்கும் தஞ்சோங் காத்தோங் சாலை சவுத்துக்கும் இடைப்பட்ட சாலைச்சந்திப்பில் தீடர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிற்பகல் 1.40 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று புதன்கிழமையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்குத் திசையிலிருந்து குளிர்காற்று சிங்கப்பூரை நோக்கி விரைவதால் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை சிங்கப்பூரில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக வியாழக்கிழமை (மார்ச் 20) காலை பத்து மணி அளவில் துவாஸ் சவுத் வட்டாரத்தில் வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.
மாலை 4 மணி நிலவரப்படி மெக்ரிட்சி நீர்த்தேக்கத்தில் ஆக அதிக அளவிலான மழை பதிவானது.