தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் கனமழை; இரு இடங்களில் திடீர் வெள்ளம்

1 mins read
a4b35439-0d47-4ae6-8224-301c04e8258c
பொத்தோங் பாசிரில் உள்ள வான் தோ அவென்யூவில் தீடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. - படம்: சாவ் பாவ் வாசகர்

சிங்கப்பூரில் நவம்பர் 22ஆம் தேதி மதியம் பெய்த கனமழையால், இரண்டு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தீவு முழுதும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

நாற்பது ஆண்டுகளில், சிங்கப்பூரில் பெய்துள்ள மிகக் கனமான மழையில் அதுவும் ஒன்று.

சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மழை அளவு பதிவானது. ஈசூனிலும் பொத்தோங் பாசிரிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும், அது பத்தே நிமிடங்களில் ஓய்ந்ததாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

முன்னதாக தீவின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியிருந்தது.

பிற்பகல் 2.50 மணியிலிருந்து, 19 இடங்களில் பொதுப் பயனீட்டுக் கழகம் வெள்ள எச்சரிக்கை விடுத்தது. அவற்றில் பெரும்பாலானவை பாய லேபார், சிராங்கூன், அல்ஜூனீட், மெக்பர்சன் உள்ளிட்ட தீவின் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் அமைந்திருந்தன.

பிற்பகல் 3.10 மணிக்கு, பொத்தோங் பாசிரில் உள்ள வான் தோ அவென்யூவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

வாகனமோட்டிகளுக்கு உதவ, தனது விரைவு நடவடிக்கைக் குழு பணியில் அமர்த்தப்பட்டதாகவும் கழகம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்