ஹைதராபாத்: கனமழையால் சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத் நகரம் தத்தளிக்கிறது.
அங்குள்ள மூசி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நகரின் முக்கிய பேருந்து நிலையமான மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இடுப்பளவு வெள்ளநீர் தேங்கியதால் அங்கு எல்லா பேருந்துச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) இரவில் புகுந்த வெள்ளநீரில் அந்தப் பேருந்து நிலையம் மிதக்கிறது. பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
தெலுங்கானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, ஹிமாயத் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் மூசி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹைதராபாத் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். நகரின் பெரும்பாலான பகுதிகள் மிதக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளநீர் ஓடுகிறது.
முசி நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புப் படை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு உள்ளதால் நிலைமையைக் கண்காணித்து அதற்கேற்ப மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மின்சாரம் தடையின்றி கிடைக்கவும் அறுந்து தொங்கும் மின்கம்பிகளைச் சரிசெய்து விபத்துகளைக் குறைக்கவும் தெலுங்கானா மாநில மின்சார வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தசரா பண்டிகை விடுமுறை என்பதால் ஏற்கெனவே பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சுற்றுலா போன்ற வெளிப்புற நடவடிக்கைகளை மாணவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.