தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டிறுதிப் பள்ளி விடுமுறை: நிலவழிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

2 mins read
866de139-fb77-43b6-8f1a-a5004d06e969
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி. - கோப்புப் படம்: சாவ்பாவ்

ஆண்டிறுதியில் வரும் பள்ளி விடுமுறை காலத்தில் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் மலேசியா செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளக்கூடும் என்று குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) முதல் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை உட்லண்ட்ஸ் காஸ்வே கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு ஆகியவற்றின்வழி மலேசியா செல்வோர், கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வார இறுதி நாள்களுக்கு இது பொருந்தும்.

மாற்று ஏற்பாடாகப் பயணிகள், மலேசியாவுக்குச் சென்று வரும் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம் என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமையன்று (நவம்பர் 11) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

குடிநுழைவு அதிகாரிகளுடன் ஒத்துழைத்து போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்க நடந்துகொள்ளுமாறும் ஆணையம் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

கடந்த செப்டம்பர் மாத பள்ளி விடுமறை காலத்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் நிலவழி எல்லைகளில் மலேசியா சென்றனர். ஆகஸ்ட் 30ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் எட்டாம் தேதி வரை அந்த விடுமுறை காலம் நீடித்தது.

செப்டம்பர் ஆறாம் தேதி மட்டும் 543,000க்கும் அதிகமானோர் நிலவழி எல்லைகளைக் கடந்தனர். அது, வரலாறு காணாத எண்ணிக்கையாகும்.

ஆண்டிறுதியில் மலேசியாவில் இருக்கும் நிலவழி எல்லைப் பகுதிகளில், வாகனங்களில் செல்லும் பயணிகள் குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க மூன்று மணிநேரம் வரை காத்திருக்க நேரிடலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது. நிலவழி எல்லைகளின்வழி பயணம் மேற்கொள்வதற்கு முன்பு வாகன ஓட்டிகள் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் ஒன் மோட்டோரிங் (One Motoring) இணையத்தளம் அல்லது புக்கிட் தீமா, அயர் ராஜா விரைவுச்சாலைகளில் நடப்பில் இருக்கும் விரைவுச்சாலை கண்காணிப்பு ஆலோசனை முறையை (Expressway Monitoring Advisory System) நாடலாம்.

குறிப்புச் சொற்கள்