நீண்ட வாரயிறுதி விடுமுறையை முன்னிட்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்குச் செல்லும் தரைவழி சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
துவாஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தனது சமூக ஊடகப் பக்கங்களில் தகவல் வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் விடுமுறையைக் கழிக்க மக்கள் பலர் மலேசியாவிற்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணம் தாமதமாகக்கூடும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கூட்டத்தைக் கண்காணித்து பயணத் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொண்டது.
போக்குவரத்தைக் கண்காணிக்கும் OneMotoring இணையப்பக்கத்தில் பிற்பகல் 3:45 மணியில் இருந்தே சிங்கப்பூர் எல்லைகளில் கூட்ட நெரிசல் இருப்பதைக் காணமுடிந்தது.
இதனால், பயணங்கள் மூன்றில் இருந்து ஆறு மணி நேரம் வரை தாமதமாகக்கூடும் என்று வாகனப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் செயலிகள் கூறுகின்றன.

