தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனரக வாகன வேக விதிமீறல்; 11 பேர்மீது குற்றஞ்சாட்டப்படும்

1 mins read
aeea27e8-c3ba-45b4-874d-59b1d9d0947b
கோப்புப் படம்: - சிங்கப்பூர் காவல்துறை

பெஞ்சமின் ‌ஷியர்ஸ் அவென்யூவில் பேருந்தை மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டியதாக நம்பப்படும் ஆடவர் உட்பட 11 பேர்மீது கனரக வானகங்களுக்கான வேக உச்சவரம்பை மீறியதாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

ஷியர்ஸ் அவென்யூவில் வேகமாகப் பேருந்தை ஓட்டிச் சென்றதாக நம்பப்படும் ஆடவருக்கு வயது 49. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது. அவர் ஓட்டிச் சென்ற வாகனம் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டக் கூடாது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 29) காவல்துறை அறிக்கைமூலம் இத்தகவல்களை வெளியிட்டது.

குற்றம் சாட்டப்படவுள்ள 11 ஓட்டுநர்கள் 32லிருந்து 63 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் ஓட்டிய வாகனங்களுக்கு வேக உச்சவரம்பைத் தாண்டாதிருப்பதை உறுதிசெய்யும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள வாகனங்களில் ஐந்து பேருந்துகள், நான்கு ‘பிரைம் மூவர்’ கனரக லாரிகள், மூன்று ‘கான்கிரீட் மிக்சர்’ லாரிகள். அவ்வாகனங்களை ஓட்டியவர்கள், அவற்றுக்கான வேக உச்சவரம்பை மீறினர், அல்லது அவர்கள் சென்ற சாலைகளுக்கு விதிக்கப்பட்ட வேக உச்சவரம்பை மீறினர் என்று நம்பப்படுகிறது.

இவ்வாண்டு முற்பாதியில் பதிவான வேக விதிமீறல் சம்பவங்களின் எண்ணிக்கை 118,000க்கும் அதிகமாகும். இது, சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதைக் காட்டிலும் 45.5 விழுக்காடு அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்