கனரக வாகன உரிமையாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) முதல் இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்திவைக்க கூடுதல் தெரிவுகள் கிடைக்கவுள்ளன.
அந்தந்த இடத்தின் உரிமையாளர்களின் ஒப்புதல் இருக்கும் பட்சத்தில், கனரக வாகன உரிமையாளர்கள் விரைவில் தனியார், குடியிருப்பு அல்லாத தகுந்த இடங்களில் இரவு முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம் என்று செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
அந்தப் புதிய இடங்களில் தொழிற்பேட்டை வளாகங்கள், அனுமதி வழங்கப்பட்ட வேலைத் தளங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
புதிய பதிவுச் சேவையின்கீழ், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன நிறுத்தும் ஏற்பாடுகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இடையூறையோ பிறருக்குப் பாதுகாப்பு அபாயங்களையோ ஏற்படுத்தக் கூடாது என்றும் ஆணையம் தெரிவித்தது.
அப்புதிய சேவை, ஓட்டுநரைத் தவிர்த்து 15 நபர்களுக்கும் மேல் அமரக்கூடிய பேருந்துகள் அல்லது 5,000 கிலோகிராமுக்கு மேல் அதிகபட்ச எடை கொண்ட சரக்கு வாகனங்கள் அல்லது கான்கிரீட் கலவை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதிய சேவையின் தகுதிவிதிகளைப் பின்பற்றாதவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று ஆணையம் கூறியது.
இது தற்போதைய வாகன நிறுத்துமிடச் சான்றிதழ் திட்டத்தின் ஒரு விரிவாக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், புதிய வாகனத்தைப் பதிவு செய்யவோ உரிமையை மாற்றவோ சாலை வரியைப் புதுப்பிக்கவோ, உரிமையாளர்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்ட கனரக வாகன நிறுத்துமிடத்தில் ஒரு நிறுத்துமிடத்தை உறுதிசெய்வது கட்டாயமாகும்.
கனரக வாகனங்கள் பொறுப்பான முறையில் நிறுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக 1994ஆம் ஆண்டில் வாகன நிறுத்துமிடச் சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டது.

