சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மோசடிகளைக் கையாள்வதற்கு உதவியாக செயற்கை நுண்ணறிவை (ஏஐ) மையமாகக் கொண்டு மாணவர்கள் தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, அவ்வாறு உருவாக்கப்பட்ட முறை ஒன்றில் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மோசடி மேற்கொள்வதற்காக வரும் அழைப்புகளால் ஏமாற்றப்படுகின்றனரா என்பதை இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆராய முடியும். நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த சேவியர் வூன், ரோகன் செந்தில் எனும் 20 வயது மாணவர்கள் இருவர், இதர ஐந்து மாணவர்களுடன் இணைந்து அம்முறையை உருவாக்கியுள்ளனர்.
ஆசிய செயற்கை நுண்ணறிவு விழா (Artificial Intelligence Festival Asia) காட்சியில் இடம்பெற்ற படைப்புகளில் அதுவும் ஒன்று. நிஜ வாழ்க்கையில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது தொடர்பில் மாணவர்களுக்குப் பயில்நிலைப் பயிற்சிகள் வழங்கப்போவதாக நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் தெரிவித்தது.
அந்த வகையில், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் மூன்றும் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 17) சிறிய, நடுத்தர நிறவனங்களின் சங்கத்துடன் (ASME) இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டன. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வேலைப் பயிற்சி அனுபவம் வழங்கி வருங்காலத்தில் வேலை செய்ய உதவ நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருவது அந்த இணக்கக் குறிப்புகளின் நோக்கமாகும்.
வியாழக்கிழமை (ஜனவரி 16) தொடங்கிய இரண்டு நாள் ஆசிய செயற்கை நுண்ணறிவு விழாவுக்கு சிறிய, நடுத்தர நிறவனங்கள் சங்கமும் வாழ்நாள் கற்றல் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்தன.