தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறியப்படாத நாயகர்களின் அரும்பணி

8 mins read
127ffd7d-161b-4bf7-92ff-58c44bafa1de
விமானிக்குத் தேவையான அறிவுறுத்தல்களை தந்து, விமானம் தரையிறங்கும்வரை அவருடனேயே பயணம் செய்கிறார் டர்ஷினி தேவராஜ், 30. - படம்: பே. கார்த்திகேயன்

உலகப் படத்தில் சிறு சிவப்புப் புள்ளியாக இருந்தாலும் கடந்த அறுபது ஆண்டுகளாகத் தன் மக்களின் அயராத, கடின உழைப்பால் இன்று மற்ற நாடுகள் வியக்கும் வண்ணம் வளர்ந்த நாடாக மிளிர்கிறது சிங்கப்பூர்.

மாற்றங்களால் நிரம்பிய சிங்கப்பூரின் பயணம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்த வெற்றிப் பயணத்தில், வெளிச்சம் படாத, ஆனால் ஒவ்வொன்றிலும் தங்கள் தடத்தைப் பதித்துள்ள நாயகர்கள் பலரது உழைப்பும் இடம்பெற்றுள்ளது.

அன்றாட வாழ்வின் பின்னணியில் யாரும் பாராட்டாத சேவைகளை வழங்கும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் அன்பும் அர்ப்பணிப்பும் வழிந்தோடுகிறது.

எஸ்ஜி60 தேசிய தினக் கொண்டாட்டத்தில் அத்தகைய அறியப்படாத நாயகர்கள் சிலரை உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்து, அவர்களின் கதைகளைக் கொண்டாடுகிறது தமிழ்முரசு.

விமானப் பயணங்களின் பாதுகாவலர்

வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது விமானி நம்மைப் பாதுகாப்பாக செல்லவேண்டிய இடத்திற்குக் கொண்டுசெல்வார் என்பதுதான் அனைவரது நம்பிக்கை.

அப்பயணத்தில் விமானியின் பங்கு ஒருபுறம் இருந்தாலும், திரைக்குப் பின்னால் விமானிக்குத் தேவையான அறிவுறுத்தல்களைத் தந்து விமானம் தரையிறங்கும்வரை கூடவே பயணம் செய்யும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம்.

அத்தகையோரில் ஒருவராக, சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார் 30 வயதாகும் டர்ஷினி தேவராஜ்.

தொடர்புடைய செய்திகள்
கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார் டர்ஷினி.
கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்து வருகிறார் டர்ஷினி. - படம்: பே. கார்த்திகேயன்

சாங்கி கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பணியாற்றும் கட்டுப்பாட்டாளர்கள் விமானங்கள் புறப்படுவதிலும் தரையிறங்குவதிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், டர்ஷினி விமானம் புறப்பட்ட பின்னர் அது வானில் பறந்து மீண்டும் தரையிறங்கும்வரை அதன் பாதுகாப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தமது பணியில் அவர் துல்லியமாகச் செயல்பட வேண்டும். இதில் நேரம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

“விமானம் வானில் பறக்கும்போது திடீரென மின்னல் அபாயமோ வேறு ஏதேனும் நேரும் அபாயமோ ஏற்படலாம். அதை ரேடாரில் கண்டு உடனடியாக விமானிக்குத் தக்க அறிவுறுத்தலைக் கொடுத்தால்தான் அவர்களால் வானில் விமானத்தைச் சரியாகச் செலுத்த முடியும்,” என்கிறார் டர்ஷினி.

பல நாடுகளிலிருந்துவரும் விமானிகளுடன் டர்ஷினி பேச வேண்டும். ஒவ்வொருவருக்கும் உச்சரிப்பு வேறுபடும். இதனால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அவர்களின் ஓராண்டு காலப் பயிற்சியின்போது விமானிகளும் கட்டுப்பாட்டாளர்களும் புரிந்துகொள்ளக்கூடிய சொற்களைக் கற்றுக்கொள்வர்.

“வானிலை மிகப் பெரிய சவால். விமானம் தரையிறங்குவதற்கு நீண்ட நேரம் ஆகக்கூடும். வானிலை மோசமாக இருந்தால் சற்று நேரம் காத்திருக்கும்படி விமானியிடம் நான் பரிந்துரைப்பேன். இருப்பினும் விமானிதான் அதுகுறித்து முடிவெடுப்பார்,” என்று டர்ஷினி விளக்கினார்.

எப்போதேனும் கடுமையான அழுத்தத்துடன் வேலை பார்த்துள்ளாரா என்று டர்ஷினியிடம் கேட்டபோது, அது நடந்துள்ளது என்றும் அத்தகைய நேரங்களில் சக ஊழியர்களுடனான ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றும் அவர் சொன்னார்.

இந்த வேலையை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்ட டர்ஷினி, அதற்குமுன் நிதித் துறையில் பணியாற்றினார். அந்த வேலையில் சலிப்பு ஏற்படவே, வேறு புதிய துறையில் சேரும் எண்ணம் தோன்றியது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பணியைப் பற்றி கேள்விப்பட்டபோது அதில் சுவாரசியம் நிறைந்திருக்கும் என்று இவர் நினைத்தார். மாறுநேரப் பணி (shift work) என்பதால் சில நேரங்களில் முக்கிய நிகழ்ச்சிகளை இவர் தவறவிட நேர்கிறது.

ஆயினும், தம் கணவரும் மாறுநேரப் பணியாளர் என்பதால் பெரிய சிக்கலில்லை என்கிறார் டர்ஷினி.

தனது பணியைப் பற்றி பலரும் கேட்டறிந்துள்ளதாகக் கூறிய டர்ஷினி, அதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

மற்றவர்களும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பணியைத் தேர்வுசெய்ய முன்மாதிரியாக விளங்க விரும்புகிறார் டர்ஷினி.

“பலருக்கு, குறிப்பாக இந்தியச் சமூகத்தினருக்கு என் வேலையைப் பற்றி தெரியாமல் இருக்கிறது. பயணிகளின் பாதுகாப்பு என் போன்றோரின் கைகளிலும் உள்ளது. சிங்கப்பூரிலிருந்து செல்பவர்களும் சிங்கப்பூருக்கு வருபவர்களும் அச்சமின்றிப் பயணம் செய்யலாம்,” என்கிறார் இந்த அறியப்படாத நாயகி.

சவக்கிடங்கில் பணியாற்றும் இளம்பெண்

எந்தப் பணியிலும் சாதிக்க பாலினம் ஒரு பொருட்டன்று என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் தஸ்லீமா ஷம்ஷெருதீன், 30.

பாலினம் ஒரு பொருட்டன்று, எந்தப் பணியிலும் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகிறார் தஸ்லீமா ஷம்ஷெருதீன், 30. 
பாலினம் ஒரு பொருட்டன்று, எந்தப் பணியிலும் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகிறார் தஸ்லீமா ஷம்ஷெருதீன், 30.  - படம்: பே. கார்த்திகேயன்

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சுகாதார அறிவியல் ஆணையத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவில் தடயவியல் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது பணி பலரும் கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம்; பலரும் விரும்பிச் செய்யாத ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால், இவரின்றி ஒருவருக்கு இறுதிப்பயணம் இல்லை.

குறிப்பாக, இயற்கைக்கு மாறாக உயிர்நீத்தவர்களின் மரண விசாரணை தொடர்பில் தஸ்லீமாவின் பணி முக்கியமாக உள்ளது.

அத்தகைய சடலங்களை நாளும் தமது பணியில் கையாளும் தஸ்லீமா, இறப்புக்குக் காரணம் தெரியாது இருக்கும் சடலங்களை நோயியல் வல்லுநர்கள் பரிசோதிக்கவும் உதவி வருகிறார்.

அதுவும் பரிசோதனைக்கு முன்னர், உடலுறுப்புகளை வெளியேற்ற உதவும் தஸ்லீமா இந்தக் கண்ணியமான பணியைப் பற்றி மேலும் விளக்கினார்.

பரிசோதனைக்கு முன்னர் உடலின் உறுப்புகளை வெளியேற்ற உதவும் தஸ்லீமா, இந்தக் கண்ணியமான பணியைப் பற்றி மேலும் விளக்கினார்.
பரிசோதனைக்கு முன்னர் உடலின் உறுப்புகளை வெளியேற்ற உதவும் தஸ்லீமா, இந்தக் கண்ணியமான பணியைப் பற்றி மேலும் விளக்கினார். - படம்: பே. கார்த்திகேயன்

நோயியல் வல்லுநரின் பரிசோதனை தேவைப்படாத சடலங்களை உடனடியாகக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பது தஸ்லீமாவை உணர்வு ரீதியாக தொடக்கத்தில் புரட்டிப்போட்டது.

“குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும்போது என் மனம் குமுறும்,” என்று உணர்ச்சிபொங்கக் கூறினார் தஸ்லீமா.

விபத்துக்குள்ளானோர் சடலங்கள், உயிரைக் மாய்த்துக்கொண்டோர், திடீரென மாண்டோர் போன்றோரின் சடலங்களை இவர் கையாள்கிறார்.

பணியில் சேர்ந்த தொடக்கக் காலத்தில், தஸ்லீமா சில சடலங்களைக் கண்டு உடைந்துபோகாத நாள்கள் இல்லை.

பெண்கள் பலரும் விரும்பிச் செய்யாத பணியைத் தேர்ந்தெடுத்துள்ள தஸ்லீமாவுக்கு படிக்கும் காலத்திலேயே அப்பணிமீது ஆர்வம் துளிர்த்தது.

குற்றக் கண்காணிப்பு நிகழ்ச்சிகள், தடயவியல் மருத்துவம் போன்றவற்றில் தஸ்லீமாவுக்கு மிகுந்த ஆர்வம்.

ஆனால், இவரது ஆர்வத்திற்குக் குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் யாரும் முதலில் துணை நிற்கவில்லை.

“இத்தகைய பணியில் ஈடுபடுவது கெட்ட சகுனம், பணியிடத்தில் துர்நாற்றம் மோசமாக இருக்கும், ஒரு பெண்ணாக எப்படி இந்தப் பணியில் ஈடுபட முடியும் என்றெல்லாம் பலர் என்னிடம் கூறினர்,” என்றார் தஸ்லீமா.

இப்போது, பணியில் மிளிர்ந்துவரும் தஸ்லீமா, குடும்பத்திலும் ஆதரவு அதிகரிக்க தொடங்கியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.

அதுவும் தன் சகோதரியின் பிள்ளைகள், அவர்களின் நண்பர்களிடம் இப்பணியைப் பற்றி பெருமையாகக் கூறும்போது, தனக்கு இன்னும் ஊக்கமாக இருப்பதாகப் புன்னகைத்தவாறே சொன்னார் இந்த அஞ்சாமங்கை.

தூய்மையான பேருந்து பயணத்திற்குக் கைகொடுப்பவர் 

நம்மில் பலர் அன்றாடம் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவது வழக்கம். பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பொறுத்தமட்டில், சிங்கப்பூரின் நிலை உலகளவில் சிறப்பான ஒன்று.

இந்தச் சேவைக்குப் பின்னால் பலருடைய உழைப்பு அடங்கியுள்ளது. பொதுப் பேருந்துகளில் ஏறும்போது அது தூய்மையாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்க ஒரு பெரிய குழு அயராமல் பணியாற்றி வருகிறது.

அத்தகையோரில் ஒருவரான ஆனந்தஜோதி முருகவேல், 35, செங்காங் வெஸ்ட் பேருந்துப் பணிமனையில் பேருந்துகளுக்கான துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக இருக்கிறார்.

செங்காங் வெஸ்ட் பேருந்துப் பணிமனையில் பேருந்துகளுக்கான துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக இருக்கிறார்.
செங்காங் வெஸ்ட் பேருந்துப் பணிமனையில் பேருந்துகளுக்கான துப்புரவுப் பணி மேற்பார்வையாளராக இருக்கிறார். - படம்: பே. கார்த்திகேயன்

பேருந்துகளில் சிறுகுப்பைகள் இருப்பது இயல்புதான். காலையில் முதல் பேருந்து சேவை செயல்படத் தொடங்கும்போது அது பளிங்குபோலத் தோன்றுவதற்கு மூலகாரணம் ஆனந்தஜோதி போன்றோர்தான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பணியைச் செய்துவரும் இவர், ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 25 பேருந்துகளின் துப்புரவுப் பணியை மேற்பார்வையிடுகிறார்.

பேருந்தின் வெளிப்புறம் தொடங்கி, உட்புறத்தில் இருக்கும் கைப்பிடி, சன்னல்கள், இருக்கைகளுக்கு நடுவே இருக்கும் இடைவெளிகள், தரைவரை நன்றாகச் சுத்தம் செய்யப்படுகின்றன.

இரவு நேரத்தில் வேலை செய்யும் ஆனந்தஜோதி, வஜ்ரா துப்புரவு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் வஜ்ரா நிறுவனம் சார்பில், எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து நிறுவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

பலரும் தமது வேலை இரவில் தொடங்கும் எனக் கேள்விப்பட்டதில்லை என்று பகிர்ந்துகொண்ட ஆனந்தஜோதி, சில நேரங்களில் பேருந்துகளில் இருக்கும் கறைகளையும் அகற்ற வேண்டும் என்றார்.

“சாயம், ரத்தம் போன்ற கறைகளைப் பார்த்துள்ளேன். சாயக் கறையை அகற்ற கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும்,” என்கிறார் இவர்.

2018ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், இதனை ஒரு வேலையாகப் பார்க்காமல் சேவை மனப்பான்மையுடன் அணுகுவதாகக் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்களிடையே மின்னும் நாயகன் 

பாலஸ்டியர் கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஃபிரான்சிஸ்குஸ் முருகையா, 41, நாள்தோறும் பல வாடிக்கையாளர்களைச் சந்திக்கிறார்.

வாடிக்கையாளர்களில் ஒருவர் தான் வழங்கிய சேவை மிகச் சிறப்பாக இருந்ததாகத் தன்னுடைய முதலாளியிடம் பாராட்டி எழுதியிருந்தபோது, பணியில் இன்னும் சிறக்க வேண்டுமென ஊக்கமடைந்தார் ஃபிரான்சிஸ்குஸ்.

கால்டெக்சில் சுழற்சி நேரப் பணித் தலைவராக உள்ள இவர் பார்க்கும் வேலைகள் பல. காசாளர், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது, எரிபொருள் கொள்கலன் வரும்போது அதனை மேற்பார்வையிடுவது போன்றவை அவற்றுல் சில.

பாலஸ்டியர் கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஃபிரான்சிஸ்குஸ் முருகையா, 41.
பாலஸ்டியர் கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்துவரும் ஃபிரான்சிஸ்குஸ் முருகையா, 41. - படம்: பே. கார்த்திகேயன்

மலேசியரான ஃபிரான்சிஸ்குஸ் அன்றாடம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணம் செய்கிறார். ஒன்பது ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றிவரும் இவர், பலரும் தனது பணி மிக எளிதானது என்று நினைப்பதாகச் சொன்னார்.

“எட்டு மணி நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும். எரிபொருள் நிலையத்தில் பணியாற்றுவது பார்ப்பதற்கு எளிதாக இருக்கலாம். அதில் அடங்கியுள்ள சவால்கள் பல,” என்கிறார் ஃபிரான்சிஸ்குஸ்.

எரிபொருள் கொள்கலன் வரும்போது அதனைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்ற ஃபிரான்சிஸ்குஸ், தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதிகாலை மூன்று மணிக்குள் வீட்டிலிருந்து கிளம்பி காலை 6.30 மணிக்குப் பணியைத் தொடங்கும் ஃபிரான்சிஸ்குஸ், சிங்கப்பூர் தனது அயராத உழைப்பிற்கு இடமளித்துள்ளதாகக் கூறினார்.

மலேசியா - சிங்கப்பூர் இடையே அன்றாடம் பயணம் செய்வது சோர்வைத் தந்தாலும் தன் மனைவிக்கும், இரு பிள்ளைகளுக்கும் இன்பமான வாழ்க்கையை அளிக்கவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ஃபிரான்சிஸ்குஸ் தம்மை இப்பணியில் அர்ப்பணித்துள்ளார்.

சுமுகமான ரயில் பயணத்திற்கு உழைக்கும் கைகள் 

ரயில் பயணங்கள் சுமுகமாக இருக்கவும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டால் அதை உடனடியாகத் தீர்க்கவும் துணை நிற்கிறார் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் உலாஸ் ராஜன்.

ரயில் பயணங்கள் சுமுகமாக இருக்கவும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டால் அதை உடனடியாகத் தீர்க்கவும் துணை நிற்கிறார் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் உலாஸ் ராஜன்.
ரயில் பயணங்கள் சுமுகமாக இருக்கவும் ஏதோ ஒரு தடை ஏற்பட்டால் அதை உடனடியாகத் தீர்க்கவும் துணை நிற்கிறார் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் உலாஸ் ராஜன். - படம்: பே. கார்த்திகேயன்

ரயில் சேவைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த செய்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். உலாசும் அவரின்கீழ் பணியாற்றும் ஊழியர்களும்  அதனை விரைவாகச் சரிசெய்து, பயணத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர முயல்கின்றனர்.

ரயில் பாதையின் சமிக்ஞை முறையில் கோளாறு ஏற்படும்போது ரயில் சேவை பாதிக்கப்படலாம். அந்தக் கோளாறு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவசரகாலச் செயல்பாட்டுக் குழுவின் பொறியியல் பராமரிப்பு மேலாளராக இருக்கும் உலாஸ், ஊழியர்கள் பலரை மேற்பார்வையிடுகிறார்.

அந்த ஊழியர்கள், ரயில் சேவையில் ஏதோ ஒரு சிக்கல் ஏற்பட்டாலும் விரைந்து அதனைச் சரிசெய்ய வேண்டும்.

அவர்களுக்குப் பயிற்சியளித்து, விரைந்து செயல்பட வைக்கும் பொறுப்பில் இருக்கிறார் உலாஸ்.

“மூன்று நிமிடத்திற்குள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த ரயில் பாதையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும். ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அடுத்த ரயில் வருவதற்குள் ரயில் பாதை சீராக இருக்க வேண்டும் என்பதால் ஊழியர்கள் பம்பரமாகச் சுழன்று வேலை பார்க்க வேண்டும்,” என்று சொன்னார் உலாஸ்.

ரயில் பாதை பாதுகாப்பாக இருக்க தண்டவாளங்கள் இறுக்கமாக இருக்க வேண்டும்.

ரயில் சேவையில் சிக்கல் நேரும்போது எந்தெந்த ஊழியர்கள் என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும், யார் எங்குச் செல்ல வேண்டும் போன்றவற்றையும் விரைந்து யோசித்து முடிவெடுப்பது உலாசின் பொறுப்புகளில் சில.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட சேவைத் தடை பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

தனது 13 ஆண்டுகாலப் பணியில் தான் கையாண்ட சம்பவங்களில் செப்டம்பர் மாத ரயில் சம்பவம் சவால்மிக்க ஒன்று எனக் குறிப்பிட்ட உலாஸ், பலர் தனது சேவையைக் குறைகூறியதாகவும் சொன்னார்.

“இத்துறையில் இருக்கும்போது எப்படி ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம், ஏன் இப்படி நடக்கிறது என்றெல்லாம் பலர் குறைகூறினாலும் நாளின் இறுதியில் என் பணியைச் சமூக சேவையாகக் கருதுகிறேன்,” என்று மலர்ந்த முகத்துடன் கூறினார் உலாஸ்.

குறிப்புச் சொற்கள்