தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிவர் வேலி தீ: பிள்ளைகள் பயந்ததை நினைவுகூர்ந்த கட்டுமான ஊழியர்கள்

2 mins read
148fb0e3-a505-4670-8303-877be9e31c9a
தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணியன் ரமே‌ஷ்குமார் (இடம்), பங்ளாதே‌‌ஷைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர் ‌‌ஷகில் முஹம்மது மற்ற ஊழியர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட பத்து குழந்தைகளைக் காப்பாற்றினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ரிவர் வேலி ரோட்டில் கட்டுமான ஊழியர் ஷகில் முஹம்மது ஏப்ரல் 8ஆம் தேதியன்று பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்து திடீரென அலறல் சத்தம் ஒலித்ததைச் செவியுற்றார்.

தீப்பற்றிக்கொண்டிருந்த கடைவீட்டின் மூன்றாவது மாடியின் விளிம்பில் சிறார்கள் நின்றுகொண்டிருந்ததைக் கண்ட 35 வயது திரு ஷகில், சக ஊழியர் 31 வயது திரு ரமேஷ்குமாருடன் அவர்களைக் காப்பாற்ற விரைந்தார்.

பங்ளாதேஷைச் சேர்ந்த திரு ஷகில், ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ இதழிடம் ஏப்ரல் 9ஆம் தேதி அளித்த நேர்காணலின்போது “பிள்ளைகள் கீழே குதிக்க முற்பட்டனர். கூச்சலிட்டு நான் அவர்களைத் தடுத்தேன்,” என்று கூறினார்.

தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணியன் ரமே‌ஷ்குமார் (இடம்), பங்ளாதே‌‌ஷைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர் ‌‌ஷகில் முஹம்மது மற்ற ஊழியர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட பத்து குழந்தைகளைக் காப்பாற்றினர்.
தமிழகத்தைச் சார்ந்த சுப்ரமணியன் ரமே‌ஷ்குமார் (இடம்), பங்ளாதே‌‌ஷைச் சார்ந்த வெளிநாட்டு ஊழியர் ‌‌ஷகில் முஹம்மது மற்ற ஊழியர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட பத்து குழந்தைகளைக் காப்பாற்றினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‌‌ஷக்கில் முதலில் கட்டடத்தில் நுழைய முயன்றதாகக் கூறினார் ரமே‌ஷ்குமார். “ஆனால் அதற்குள் நெருப்பு அதிகமடைந்துவிட்டதால் அவரால் நுழையமுடியவில்லை,” என்றார் ரமே‌ஷ்குமார்.

மற்றொரு கட்டுமானத் தளத்திலிருந்து சில ஊழியர்கள் சாரக்கட்டையைத் தூக்கிக் கொண்டு கடைவீட்டுக்கு ஓடிவந்தனர் என்றும் அதன் உயரம் போதவில்லை என்றும் கூறிய ரமே‌ஷ்குமார், ‌‌ஷக்கிலுடன் இணைந்து தம் வேலையிடத்திலிருந்து ஏணியை எடுத்துவந்தார்.

“சாரக்கட்டில் ஏணியை வைப்பது அவ்வளவு பாதுகாப்பானதல்ல. ஆனால் வேறு வழியில்லை. கவனமாக இருக்கவேண்டியிருந்தது,” என்றார் ரமே‌ஷ்குமார்.

ஏணியில் இரண்டாவதாக நின்ற திரு ‌‌ஷக்கில், மேலே இருந்த ஊழியர் குழந்தையை மீட்டுத் தர, திரு ரமே‌ஷ்குமார் உள்ளிட்ட தனக்குக் கீழே இருந்த ஊழியர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.

தாள முடியாத அளவுக்கு அனல் வெப்பமாக இருந்ததாகக் கூறினார் திரு ‌‌ஷகில்.

“நான் இறந்தாலும் பாதகமில்லை. பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என எண்ணினேன். மற்ற ஊழியர்களும் சேர்ந்து ஏறத்தாழ பத்து பிள்ளைகளைக் காப்பாற்றியிருப்போம்,” என திரு ‌‌ஷகில் கூறினார்.

“தீ மிகவும் பெரிதாக இருந்ததால் உள்ளே மூன்று குழந்தைகள் சிக்கியிருந்தபோதும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சொல்லொணா மனத்துயரை உணர்கிறேன்.,” என்று அவர் கண்ணீர் மல்கக் கூறினார். தான் மீட்ட ஒரு சிறுமியின் கண்கள் மூடியிருந்ததாகவும் திரு ‌‌ஷகில் கூறினார்.

நான் இறந்தாலும் பாதகமில்லை. பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றவேண்டு என எண்ணினேன்.
‌‌ஷக்கில் முஹம்மது

சமையல் வகுப்புகளையும் சிறார்களுக்கான முகாம்களையும் நடத்தும் ‘டொமேட்டோ குக்கிங் ஹவுஸ்’, 278 ரிவல் வேலி சாலையில் தீப்பற்றிய கடைவீட்டில் இயங்கி வருகிறது.

தீச்சம்பவத்தால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு அந்தச் சிறுமி உயிர் நீத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று அந்நாட்டின் வெளியுறவு விவகார, வர்த்தகத் துறை உறுதி செய்தது.

சிங்கப்பூரில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் குடும்பத்தினருக்கு வெளியுறவு விவகார, வர்த்தகத் துறை உதவி அளித்துவருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தோரில் இந்திய அரசியல்வாதி பவன் கல்யாணின் மகன் 7 வயது மார்க் ஷங்கரும் ஒருவர் என்று பல்வேறு இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவியோருக்கு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் சமூக உயிர்காப்பாளர் விருது வழங்குவதற்காக அவர்களைத் தொடர்புகொண்டு வருவதாக குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் கூறினார்.

- கூடுதல் செய்தி: ரவி சிங்காரம்

குறிப்புச் சொற்கள்