இளையர்களைக் குறிவைக்கும் அபாயமிகு காதல் தளங்கள்

இளையர்களைக் குறிவைக்கும் அபாயமிகு காதல் தளங்கள்

2 mins read
0c22ae21-fc36-4526-9502-60911d022533
சிங்கப்பூரில் காதலர்களைத் தேடிக்கொள்ள உதவும் செயலிகளை 18 வயது அல்லது அதையும் தாண்டியோர்தான் பயன்படுத்தலாம். - மாதிரிப்படம்: எஸ்பிஎச் மீடியா

டெலிகிராமில் காதலர்களைத் தேடிக்கொள்ள வகைசெய்யும் (dating) தளத்தில் 16 வயதுக்குக்கீழ் உள்ள பெண்களின் தகவல்களை நாடினார் ஜேம்ஸ் (உண்மையான பெயர் அல்ல).

தான் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்தவர் என்றும் லியோமேட்ச் என்ற அந்தத் தளத்தில் பிறரைப் போல் தானும் நண்பர்களைத் தேடியதாகவும் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஆனால், அவரின் உண்மையான வயது 22. நீச்சல் ஆசிரியர், அலுவலக உதவியாளர் போன்ற பணிகளை மேற்கொண்டுவந்தார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஆறு மாத காலத்தில் ஜேம்ஸ், இரண்டு இளம் பெண்களைத் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளச் செய்தார்.

இப்போது 25 வயதாகும் அவருக்கு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 11 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக்கொண்டது, 16 வயதுக்குக்கீழ் உள்ளவரைப் பாலியல் உறவுக்குத் தயார்ப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பாலியல் ரீதியாக வயது குறைந்தவர்களைக் குறிவைத்ததற்காக பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜேம்ஸ் உட்பட இரு ஆண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் காதலர்களைத் தேடிக்கொள்ள உதவும் செயலிகளை 18 வயது அல்லது அதையும் தாண்டியோர்தான் பயன்படுத்தலாம். ஆனால், லியோமேட்சில் பதிவுசெய்துகொள்ளத் தடை ஏதும் இல்லை.

டெலிகிராம் புள்ளிவிவரங்களின்படி லியோமேட்சில் 14 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். 18 வயதுக்குக்கீழ் உள்ள பலர் அதில் பதிவுசெய்துகொண்டிருப்பதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டுபிடித்தது.

பயனர்கள், ஒருவரின் லியோமேட்ச் கணக்கை ‘விரும்பு’வதாகப் (like) பதிவிட்டால் போதும். பிறகு அவர்கள் டெலிகிராமில் தொடர்புகொள்ளலாம். இது தவறாக முடியக்கூடும் என்று வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவரிக்கின்றனர்.

பதின்ம வயதினருக்கு மறுப்பையும் நிராகரிப்பையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருக்கலாம். அதனால் இதுபோன்ற தளங்கள்வழி பிறரிடமிருந்து ஆறுதல் தேடும்போது அபாயங்கள் ஏற்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

இத்தகைய பிரச்சினைகளைக் கையாள அண்மை ஆண்டுகளில் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், தங்கள் வயதுக்குப் பொருந்தாத செயலிகளைப் பதின்ம வயதினர் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. காதல் தளங்களும் தாங்களே வயதுக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தியிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் டிண்டர் செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.

16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்திருந்தது. அதனையடுத்து பிள்ளைகளையும் பதின்ம வயதினரையும் பாதுகாப்பதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

அதேவேளை, லியோமேட்ச் போன்ற தளங்கள்வழி இணையைத் தேடுவதில் உள்ள அபாயங்களைப் பற்றிப் பெற்றோரும் பிள்ளைகளுக்குப் புரிய வைக்கலாம் என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்