ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தின் கழிப்பறையில் கேமராவை மறைத்து வைத்ததாகக் கூறப்படும் ஆடவர்மீது வியாழக்கிழமை (நவம்பர் 5) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹியூ லட்லி என்ற அந்த 52 வயது பிரிட்டிஷ் நாட்டவர்மீது அந்தரங்கத்தை ரகசியமாகப் படம்பிடித்ததாகவும் ஆதாரங்களை அழித்து, நீதிமன்றச் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவித்ததாகவும் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பயணிகள் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடுவதைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மாலை 5.10 மணியளவில் கேமரா ஒன்றை இயக்கியதாக லட்லிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, ஜப்பானின் ஒசாகா நகரிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த டிஆர்821 ஸ்கூட் விமானத்தில் அச்சம்பவம் நடந்தது. காவல்துறையினர் வெளியிட்ட செய்தி அறிக்கையில், விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் ரகசியக் கேமராவை லட்லி மறைத்து வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையை விட்டு வெளியே வந்த பிறகு, தனது கைப்பேசிச் செயலி வாயிலாக அவர் கேமராவின் பதிவு செய்யும் செயல்பாட்டை தொலைவிலிருந்து இயக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், விமானப் பணிப்பெண் ஒருவர் அக்கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவைக் கண்டார்.
அவர் உடனடியாக அதை அங்கிருந்து அகற்றிவிட்டு, சக விமானப் பணியாளரிடம் தகவல் தெரிவித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தைச் சென்றடைந்ததும் லட்லி விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார். அவரது கைப்பேசியும் கேமராவும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
