முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனின் வழக்கு விசாரணையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள 56 சாட்சிகளின் நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்குமூலங்களையும் அரசு தரப்பு வழங்கக் கோரி ஈஸ்வரன் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வாய்மொழி சாட்சியத்துக்குப் பதிலாக எழுத்துபூர்வ வாக்குமூலத்தில் ஆதாரம் வழங்குவதே நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்குமூலமாகும். பெரும்பாலும் நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்தவே இது பயன்படுத்தப்படுகிறது.
வழக்கு விசாரணையில் சாட்சிகளின் எந்தெந்த வாக்குமூலங்களைப் பயன்படுத்த அரசு தரப்பு விரும்புகிறதோ, அதை மட்டுமே அது உள்ளடக்க வேண்டும் என்பதை நீதிபதி வின்சென்ட் ஹூங் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) கண்டறிந்தார்.
செயல்முறை தவறாகப் பயன்படுத்தப்பட்டது அல்லது இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு கடுமையான அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் தற்காப்பு தரப்பு வாதங்களை தம்மால் ஏற்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.
சட்டத்தின்கீழ், வழக்குக்கு முந்திய விசாரணை வெளிப்படுத்தும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக, தன் அனைத்து சாட்சிகளின் நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்குமூலங்களை அரசு தரப்பு வழங்க வேண்டும் என நீதிபதி ஹூங் முன்னிலையில் ஈஸ்வரனின் வழக்கறிஞர்கள் ஜூலை 5ஆம் தேதி வாதிட்டிருந்தனர்.
வழக்கு விசாரணையின்போது பயன்படுத்த எண்ணப்படும் நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்குமூலங்களையே அரசு தரபு வழங்க வேண்டும் என சட்டம் கூறுவதாக அரசு தரப்பு வாதிட்டது.
ஈஸ்வரனின் விசாரணைக்காக நிபந்தனைகளுக்குட்பட்ட வாக்குமூலங்களைச் சார்ந்திருக்க தான் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று அரசு தரப்பு கூறியது. எனவே, சாட்சிகளிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அதனால், தற்காப்பு தரப்பிடம் எதுவும் வழங்கப்படவில்லை என்று அரசு தரப்பு சொன்னது.
“தேவைக்குமேல் அதிகமானவற்றை” தான் தற்காப்பு தரப்பிடம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அரசு தரப்பு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஈஸ்வரனிடமிருந்து பெறப்பட்ட 66 வாக்குமூலங்கள், மொத்தம் 1,156 பக்கங்கள் கொண்ட ஆவணச் சான்று உள்ளிட்டவை அரசு தரப்பு வெளிப்படுத்தியுள்ள ஆதாரங்களில் அடங்கும். லஞ்ச, ஊழல் புலன்விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையின்போது ஏழு சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட 37 வாக்குமூலங்களும் அவற்றில் அடங்கும்.