அதிகத் திறன்வாய்ந்த சாலைக் காணொளித் திட்டம்: எல்டிஏ பரிசீலனை

அதிகத் திறன்வாய்ந்த சாலைக் காணொளித் திட்டம்: எல்டிஏ பரிசீலனை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Nov 2026 - 10:48 am

2 mins read

சிங்கப்பூர் சாலைகளில் அதிகத் திறன்வாய்ந்த காணொளித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) பரிசீலனை செய்கிறது.

அதுபோன்ற காணொளித் தளத்தின் வழியாக சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணங்கள், போக்குவரத்தில் ஏற்படும் ஆபத்துகள், சாலையில் தவறி விழும் பொருள்கள், சட்டத்துக்கு எதிராக நிறுத்தப்படும் வாகனங்கள் போன்ற பலவற்றை உடனடியாகக் கண்டறியமுடியும் என்று ஆணையம் தெரிவித்தது.

உதாரணமாக, பொதுச் சாலைகளில், விரைவுச்சாலைகளில், சுரங்கங்களில் திடீரென நிறுத்தப்படும் அல்லது போக்குவரத்துக்கு எதிராகச் செல்லும் வாகனங்கள், சைக்கிளோட்டிகள், நடையர்கள் போன்ற சம்பவங்களின் காணொளிகள் புதிய திறன்வாய்ந்த கட்டமைப்பில் பதிவு செய்யப்படும்.

சாலைத் தடங்களை மறைக்கும் வாகனப் பாகங்கள், கட்டுமானப் பொருள்கள், விழுந்த மரத்துண்டுகள், விபத்துக்குள்ளான விலங்குகளின் உடல்கள் அல்லது ஆபத்தான உபகரணங்களை அதிகாரிகள் கண்டறிய இத்திட்டம் உதவியாக அமையும்.

அதன்வழியாக அதிகாரிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கமுடியும். இத்திட்டம் படிப்படியாக 2028ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படும்.

இத்திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிப்பு அரசாங்கக் கொள்முதல் தளமான ‘ஜிபிஸ்’ இணையத்தளத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஏதேனும் சம்பவங்கள் சாலைகளில் நிகழ்ந்தால் அதனை அதிகாரிகள் உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் காணொளிகள் அமையவேண்டும் என்பது திட்டத்தின் முக்கிய அம்சம்.

தற்போதுள்ள சாலைப் போக்குவரத்துக் கண்காணிப்பு செயல் வல்லமையை மேம்படுத்தி வருவதாகவும் அதில் இத்திட்டமும் ஒன்று எனவும் ஆணையம் தெரிவித்தது.

மேம்படுத்தப்பட்ட திறன் காணொளிக் கட்டமைப்பு முழுமையான சாலைப் போக்குவரத்து நிலைப்பாட்டை அறியவும் இடையூறுகளை உடனடியாகக் கண்டறிந்து செயல்படவும் சிறப்பாக நிர்வகிக்கவும் வழிவகைகளை அமைக்கும் என்று ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்ஆணையம்காணொளிசாலைபாதுகாப்புதிறன் மேம்பாடுகட்டுமானம்லாரிபேருந்துபோக்குவரத்து அமைச்சுதடை