தெம்பனிஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சிங்கப்பூரின் அதிக மக்கள்தொகை கொண்ட திட்டமிடல் பகுதியாக நீடிக்கிறது.
ஆனால், வடகிழக்கு நகரங்களான செங்காங், பொங்கோல் ஆகியவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
ஜூன் மாத நிலவரப்படி, தெம்பனிசில் 296,060 குடிமக்களும் நிரந்தரவாசிகளும் வசித்தனர்.
இது, பிடோக் (272,120), செங்காங் (265,830), உட்லண்ட்ஸ் (255,280), ஜூரோங் வெஸ்ட் (250,890) ஆகிய பகுதிகளைவிட அதிகமாகும்.
பொங்கோல் 204,490 குடியிருப்பாளர்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது.
அக்டோபர் 28ஆம் தேதி சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறையால் வெளியிடப்பட்ட செய்திக்கடிதத்தின் இரண்டாவது பதிப்பில் இந்தப் புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தெம்பனிஸ் 2024ஆம் ஆண்டு முதல் அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாக இருந்துவந்தாலும், வேகமாக வளர்ந்துவரும் முதல் பத்துப் பகுதிகளில் அது இடம்பெறவில்லை.
கடந்த பத்தாண்டுகளில், செங்காங் ஆண்டுதோறும் சராசரியாக 1.9 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1.3 விழுக்காட்டு வளர்ச்சி அடைந்த தெம்பனிசைவிட வேகமானது.
செங்காங்கிற்குக் கடந்த பத்தாண்டுகளில் கூடுதலாக 46,450 பேர் குடியேறியுள்ளனர்.
அதேநேரம் தெம்பனிசில் கூடுதலாக 36,950 பேர் சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் செங்காங் 2016ல் ஆறாவது இடத்திலிருந்து 2026ல் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அருகில் உள்ள பொங்கோல், ஆண்டுக்கு 4.6 விழுக்காட்டு வளர்ச்சி அடைந்து, 2026ல் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 10 பகுதிகளுக்குள் நுழைந்தது.
2016ல் 130,380ஆக இருந்த அதன் மக்கள்தொகையுடன் கூடுதலாக 74,110 குடியிருப்பாளர்கள் இணைந்துள்ளனர்.
சிங்கப்பூர்ப் புள்ளிவிவரத்துறை தரவரிசைப்படுத்திய பகுதிகளில், பொங்கோலின் வளர்ச்சி விகிதம் ‘டௌன்டவுன் கோர்’ என்னும் மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
எல்லை மாற்றத்தின் காரணமாக அங்கு அந்த வளர்ச்சி ஏற்பட்டது.
தெம்பனிசைவிட வேகமாக வளர்ந்த மற்றொரு பகுதி புக்கிட் பாத்தோக் (1.8%) ஆகும்.
இது 2021ஆம் ஆண்டு முதல் 10வது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியாக நீடிக்கிறது.
ஜூன் மாத நிலவரப்படி, அங்கு 165,680 குடியிருப்பாளர்கள் இருந்தனர்.
இந்தப் புவியியல் பரவலானது நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் பெருந்திட்டம் 2025ஐ அடிப்படையாகக் கொண்டது.
இது சிங்கப்பூரை 55 பகுதிகளாகப் பிரிக்கிறது. மக்கள் பொதுவாகப் புரிந்துகொள்ளும் குடியிருப்பு வட்டார எல்லைகளிலிருந்து இது வேறுபடக்கூடும்.
