மாணவர்களின் நலனுக்காக நிறுவனங்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தும் உயர்கல்வி நிலையங்கள்

2 mins read
b92cbd58-92fb-41d3-81ae-4e30c005138f
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள ஒரு வகுப்பறை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதன்முறையாக, தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள், அடுத்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவையும் (ஏஐ) தரவுப் பகுப்பாய்வையும் இணைக்கும் பாடத்தைப் படிக்கமுடியும்.

எதிர்கால ஊடகத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கும் முறையை மாற்றுவது குறித்து அது ஆராய்ந்து வருகிறது. ஊடகத் துறையில் திறன்மிக்க பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

“ஊடகத் துறையில் உள்ள நிறுவனங்கள் படைப்புகளை உருவாக்குவோரை மட்டும் தேடுவதில்லை. ஏஐ பற்றியும் தரவுகளைச் சேகரித்து, அவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு படைப்புகளை மெருகேற்றலாம் என்பது குறித்தும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்,” என்றார் கல்லூரியின் வர்த்தகப் பள்ளி மேலாளர் லோங் லி யான்.

சிங்கப்பூரின் உயர்கல்வி நிலையங்கள் அத்தகைய போக்கைப் பின்பற்றுகின்றன. அவை தொழில்துறை நிறுவனங்களுடன் கைகோப்பது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கூடியுள்ளது.

செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பமும் தொடர்ந்து அதிவேக மாற்றங்களைக் கண்டுவருகின்றன. அவற்றுக்கு மாணவர்கள் ஈடுகொடுக்க உதவும் வகையில் ஊடக, தொழில்நுட்ப, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனான உறவுகளை உயர்கல்வி நிலையங்கள் வலுப்படுத்துகின்றன.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில், தொழில்துறையினருடன் தொடர்புடைய வகுப்புகள், பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளன.

அக்கல்வி நிலையம் சென்ற ஓராண்டில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஊடக, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவற்றில் அடங்கும்.

பல்கலைக்கழகங்களும் தொழில்துறையினருடான உறவுகளை விரிவுபடுத்துகின்றன.

நன்யாங் தொழில்நுட்பக் கல்லூரியின் கலை, வடிவமைப்பு, ஊடகப் பள்ளி, உள்நாட்டிலும் உலகளவிலும் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டுக்குப் பிறகு 50 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பம், விளையாட்டு வடிவமைப்பு, சமூக ஊடகம் போன்ற துறைகளில் மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கு அத்தகைய தொடர்புகள் உதவுகின்றன.

லசால் கலைக் கல்லூரியும் அத்தகைய அணுகுமுறையைக் கையாள்கிறது. படைப்பாக்க அடிப்படைகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் புத்தாக்கத்திலும் அது கவனம் செலுத்துகிறது. நிறுவனங்களுடன் பங்காளித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியிலும் கல்லூரி ஈடுபட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்