நான்கு வாரங்களில் 7 ஊழியர் மரணம்; வேலையிடப் பாதுகாப்பை அதிகரித்த அமைச்சு

தேசிய அளவில் இரு வார பாதுகாப்பு மறுஆய்வு, அதிக அபராதம், நீண்ட வேலைநிறுத்த காலம்

நான்கு வாரங்களில் 7 ஊழியர் மரணம்; வேலையிடப் பாதுகாப்பை அதிகரித்த அமைச்சு

2 mins read
86c6c161-4ed4-4fbb-8a3a-51dc6073d020
இந்த ஆண்டின் மொத்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அண்மைக்காலமாக வேலையிடங்களில் அதிகரித்து வரும் மரணங்களைத் தொடர்ந்து, வேலையிடப் பாதுகாப்பை பலப்படுத்த புதிய நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அறிவித்துள்ளது.

கடந்த நான்கு வாரங்களில் ஐந்து வெவ்வேறு சம்பவங்களில் ஏழு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டின் மொத்த வேலையிட மரணங்களின் எண்ணிக்கை 21 ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதேகால கட்டத்தில் 18 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.

முதலாவதாக, ஜூன் 26 முதல் இரண்டு வாரங்களுக்கு தேசிய அளவிலான பாதுகாப்பு மேம்பாட்டுக்கு (Safety Time-out) மனிதவள அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இக்காலகட்டத்தில், நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்து, வாகனப் போக்குவரத்து, ஊழியர்களின் பாதுகாப்பு, அவசரகால மீட்பு, மருத்துவ உதவி போன்ற நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஜூலை 31 வரை கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முதன்முறை விதிமீறல்களுக்கான அபராதம் $2,000லிருந்து $3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் இன்னும் கடுமையாக்கப்படும்.

பாதுகாப்பு குறைபாடுகளுக்கான வேலைநிறுத்த உத்தரவின் குறைந்தபட்சக் காலம் ஐந்து வாரங்களிலிருந்து எட்டு வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடுமையான விபத்துகளுக்குக் காரணமான நிறுவனங்கள், மூன்று மாதங்களுக்குப் புதிய வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்படும்.

பாதுகாப்பு நிலைமை சீரடையவில்லை எனில் இக்கட்டுப்பாடுகள் மேலும் அதிக காலத்துக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

பல அமைச்சுகளை உள்ளடக்கிய பணியிடப் பாதுகாப்புப் பணிக்குழுவின் ஆதரவோடு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

வேலையிடப் பாதுகாப்பு கூட்டுப் பொறுப்பு: தினேஷ் வாசு தாஸ்

வேலையிடப் பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு என்று மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

ஆபத்துகள் பாதிப்பாக மாறுவதற்கு முன்பே தலையிடுவதற்கு, நிர்வாகம், மேற்பார்வையாளர்களிடம் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருப்பது முக்கியம் என்றார் அவர்.

எந்தவொரு காலக்கெடுவோ அல்லது வணிக இலக்கோ மனித உயிரை விடப் பெரியதல்ல என்று திரு தினேஷ் வாசு வலியுறுத்தினார்.

மனிதவள அமைச்சின் தேசியப் பாதுகாப்பு மறுஆய்வு, கடுமையான அபராத நடவடிக்கைகளுக்கு ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், என்டியுசியின் உதவித் தலைமைச் செயலாளருமான மெல்வின் யோங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பிற்கு எப்போதும் முதலிடம் தரப்பட வேண்டும் என்பதை இந்நடவடிக்கை உணர்த்துகிறது,” என்றார் அவர்.

வேலையிடங்களில் ஏதேனும் தவறு நடக்கும்போது ஊழியர்கள் பயமின்றிப் பேசும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். முன்கூட்டியே எச்சரிப்பதன் மூலம் பல விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வேலையிடம்ஊழியர்கள்விபத்துபணிமனிதவளம்