கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமது வாழ்க்கையைத் தொண்டூழியத்துக்கு அர்ப்பணித்துள்ளவர் டாக்டர் எஸ்.வாசு, 83.
இவர் 1970களில் அங் மோ கியோ சமூக சேவை நிலையம் தொடங்க உதவியதுடன் பல தலைமுறைச் சமூக சேவையாளர்களுக்கு ஊக்கமளித்து, குடும்பங்களுக்கும் தோள் கொடுத்துள்ளார்.
அவரது சேவையை அடையாளம் கண்டு அவருக்கு ‘நல்ல தலைவர்கள்’ எனும் பிரிவில் தொண்டூழியம் மற்றும் அறக்கொடைக்கான அதிபரின் விருது வழங்கப்பட்டது.
“பிறருக்கு உதவ வேண்டும் என்பது பத்து வயதிலிருந்தே என் ரத்தத்தில் ஊறிய ஒன்று. சிறுவயதிலிருந்தே தொண்டில் ஈடுபட்டு வந்ததால் அதைக் கைவிட முடியாமல் செய்துகொண்டே இருக்க உந்துதல் தொடர்கிறது,” என்று சொன்னார் டாக்டர் எஸ்.வாசு.
இந்த ஆண்டு 12வது முறையாக நடைபெற்ற தொண்டூழியம் மற்றும் அறக்கொடைக்கான அதிபரின் விருது விழாவில் டாக்டர் எஸ். வாசுவைச் சேர்த்து 13 பேர் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டனர்.
ராஃபிள்ஸ் ஹோட்டலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற விருது விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தம் துணைவியாருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
அவருடன் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங்கும் கலந்துகொண்டார்.
“கொவிட்-19 நோய்ப் பரவலுக்குப் பிறகு தொண்டூழியம் புரிவோரின் எண்ணிக்கை கடந்தாண்டு 30 விழுக்காட்டுக்கு அதிகரித்தது. அத்துடன், தொண்டூழியம் மற்றும் அறக்கொடைக்கான அதிபர் விருது விழாவில் அடுத்த ஆண்டு இரண்டு மாற்றங்கள் செய்யப்படும். சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டும் லாப நோக்கற்ற அமைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கான விருதுப் பிரிவு அறிமுகப்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“அடுத்ததாக, தேசிய தொண்டூழியம் மற்றும் அறக்கொடை நிலையம், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, தேசிய இளையர் மன்றம் போன்ற பொதுச் சேவை அமைப்புகளுடன் இணைந்து தகுதியுடையவர்களை விருதுக்குப் பரிந்துரைக்கும் பணிகளில் ஈடுபடும். நியமனங்களைச் சமர்ப்பிக்கும் காலகட்டம், ஆறு வாரங்களிலிருந்து 12 வாரங்களாக அதிகரிக்கப்படும்,” என்று அமைச்சர் எட்வின் டோங் தமது உரையில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு பத்துப் பிரிவுகளில் மொத்தம் 294 பரிந்துரைகள் வந்திருந்தன.
திரு வாசுவைப் போல விருது பெற்ற மற்றொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த திரு எழில் மதியன் லட்சுமணன், 65.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இதர நோயாளிகளுக்கு ஆதரவுக்கரமாக விளங்கி வருகிறார்.
மலக்குடலிலும் விந்தகத்திலும் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது திரு எழிலுக்கு இணையம்தான் ஆதரவாக இருந்தது. பின்னர், புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு வழங்கும் குழுவைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்த திரு எழில், தமது தொண்டூழியப் பயணத்தைத் தொடங்கினார்.
“உன்னால் முடிந்தால் நீ பிறருக்கு உதவு என்பதுதான் எனது தாரக மந்திரம்,” என்றார் திரு எழில்.
புற்றுநோயாளிகளின் அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அவர்கள் அருகில் சென்று ஆதரவாகச் சில வார்த்தைகளைச் சொல்லி வருகிறார் திரு எழில்.
மேலும், பள்ளிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றுவது போன்றவற்றில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் அவருக்கு ‘நல்ல மக்கள்’ பிரிவில் விருது வழங்கப்பட்டது.
“மனைவியிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைத்தபோதும் எனக்கு அதிகளவில் ஆதரவு தேவைப்பட்டபோது எனக்கு அது கிடைக்கவில்லை. மற்ற புற்றுநோயாளிகள் அதை எதிர்நோக்கக்கூடாது என்று நான் நினைக்கத் தொடங்கினேன்,” என்றார் திரு எழில்.

