பெருவரவேற்பு பெற்ற மலர்க்காட்சி திங்கட்கிழமைவரை நீட்டிப்பு

பெருவரவேற்பு பெற்ற மலர்க்காட்சி திங்கட்கிழமைவரை நீட்டிப்பு

2 mins read
39a956ab-35d1-4678-9625-8b58e022ab53
‘இம்பா’ தியேட்டரில் நடைபெற்று வரும் ‘ஃபிளவர் மார்க்கெட்’ மலர்க்காட்சியில் கூட்டம் அலைமோதியது. - படம்: ஷின் மின்
Google News Preferred Icon

ஆஸ்திரேலியக் கலைஞர் சிஜே ஹென்ரியின் செயற்கை மலர்களைப் பெறுவதற்காக ‘ஃபிளவர் மார்க்கெட்’ மலர்க்காட்சிக்குச் செல்ல விரும்புவோர், திங்கட்கிழமை (ஜூன் 15) வரை அங்குச் செல்லலாம்.

மக்களிடமிருந்து கிடைத்துவரும் ‘அமோக வரவேற்பு’ காரணமாக இம்மலர்க்காட்சி மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கரையோரப் பூந்தோட்டங்களின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூடுதல் முன்பதிவு இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பதிந்துகொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்த ‘இம்பா’ (IMBA) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கல் லீ, “ஃபிளவர் மார்க்கெட் மலர்க்காட்சி தொடங்கப்பட்ட நாள்முதல் எதிர்பாராத அளவிற்கு வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

“வார இறுதி நாள்களில் இடப்பற்றாக்குறை காரணமாக சிலர் உள்ளே செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்திருக்கலாம் என்பதை நாங்கள் அறிகிறோம்.

“அவர்களின் பொறுமைக்கும் புரிதலுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பான, சுமுகமான சூழலை உறுதிசெய்யும் அதேவேளையில், முடிந்தவரை அதிகமானோரை அனுமதிக்கும் பொருட்டு, கூடுதல் முன்பதிவு செய்யும் முறை படிப்படியாக வழங்கப்பட்டு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதாக திரு லீ கூறினார்.

‘இம்பா’ தியேட்டருக்குள் நுழைய வரிசையில் காத்திருப்போர்.
‘இம்பா’ தியேட்டருக்குள் நுழைய வரிசையில் காத்திருப்போர். - படம்: ஷின் மின்

“மலர்க்காட்சிக்கு வருவோர் மற்றவர்களுக்கும் இங்குள்ள ஊழியர்களுக்கும் மதிப்பளித்து, வளாகத்தின் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடக்குமாறு நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மலர்க்காட்சிக்கான அனுமதி இலவசம். அங்கு செல்வோர் ஒவ்வொருவரும் ஒரு மலரை இலவசமாக வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம்.

கூடுதல் மலர்கள் தேவைப்படுவோர் ஒரு மலருக்கு $7 செலுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த மலர்க்காட்சி மக்களிடையே மலர்கள் மீதான மோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 10ஆம் தேதி மலர்க்காட்சி தொடங்கியபோது வளாகத்திற்கு வெளியே பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. சிலர் உள்ளே செல்வதற்காக இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆராய்ந்ததில், ‘கேரோசெல்’ இணைய வணிகத் தளத்தில் இந்தச் செயற்கை மலர்கள் பலரால் மறுவிற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 25 மலர்கள் கொண்ட ஒரு மலர்க்கொத்து $300 வரை விற்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, இம்மலர்க்காட்சிக்கான நுழைவுச்சீட்டுகளைச் சிலர் $88 வரை விற்க முற்படுவதும் கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்