செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஆடவருக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 9) பிணை மறுக்கப்பட்டது.
அவர் மீண்டும் குற்றம் புரியக்கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது என்றும் அவர் ‘மிக ஆபத்தானவர்’ என்றும் அரசுத் தரப்பு கூறியது.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, பஸ்நாயக கீத் ஸ்பென்சர், 37, தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் உள்ள அந்த தேவாலயத்தில், கத்தியைப் பயன்படுத்தி 57 வயது பாதிரியார் கிறிஸ்டஃபர் லீக்குக் கடும் காயம் ஏற்படுத்தியதாக நவம்பர் 11ஆம் தேதி அந்த சிங்கப்பூரர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
பஸ்நாயக கத்தியால் பாதிரியாரின் வாயில் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால், பாதிரியாரின் நாக்கில் எட்டு சென்டிமீட்டர் நீளத்துக்கும் உதட்டில் மூன்று சென்டிமீட்டர் நீளத்துக்கும் வாயின் ஓரத்தில் நான்கு சென்டிமீட்டர் நீளத்துக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
காவல்துறையினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னர், தேவாலயத்தில் கூடியிருந்தவர்கள் பஸ்நாயகவிடமிருந்து கத்தியைப் பறித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து, ரத்தக் கறை படிந்த வெள்ளை டி-சட்டையில் ஆடவர் ஒருவர் கொண்டு செல்லப்படும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்தது.
முன்னதாக, அந்தச் சம்பவம் பயங்கரவாதச் செயல் என்று தாங்கள் சந்தேகிக்கவில்லை எனக் காவல்துறையினர் கூறினர். அது சமய ரீதியாகத் தூண்டப்பட்ட தாக்குதல் என்பதைக் காட்ட ஆதாரங்கள் இல்லாததே அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
பாதிரியார் லீ நவம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி காவல்துறையினர் பஸ்நாயகவை மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடந்த நாளன்று அவர் அதிகாரிகளிடம் தான் சென்ற இடங்களைக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் காவல்துறை வாகனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு கடும் காயம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், பஸ்நாயகவிற்கு ஆயுள் தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.