ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (நவம்பர் 5) அதிகாலை மூன்று கனரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 13 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
காலை 5.50 மணியளவில் மரினா கோஸ்ட்டல் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் உள்ள ஜாலான் பூன் லே வெளிவழிக்கு முன்பு விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்துக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தகவல் வெளியிட்டுள்ளன.
விபத்தில் இரண்டு லாரிகளும் பேருந்தும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
42 வயது லாரி ஓட்டுநரும், அதில் பயணம் செய்த 12 பேரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அவர்களில் எட்டுப் பேர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும், ஐந்து பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.
லாரி ஓட்டுநர் தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவிவருகிறார்.
விபத்து தொடர்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், விரைவுச்சாலை ஓரத்தில் உள்ள லாரிக்கு அருகே அமர்ந்திருக்கும் பலருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிப்பதைக் காண முடிகிறது.
இடதுபுறப் பாதையில் ஒருவர் அசைவற்றுப் படுத்துக் கிடக்கிறார். சற்றுத் தொலைவில், இரண்டாவது லாரியும், காரும், தனியார் பேருந்தும் அதே பாதையில் நின்றுகொண்டிருந்தன. குறைந்தது ஐந்து அவசர மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்தன.
24 மணி நேரத்திற்குள் கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தது இது இரண்டாவது முறையாகும்.
நவம்பர் 4ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் துவாஸ் பகுதியில் பேருந்து, லாரி, கனரக லாரி விபத்துக்குள்ளாயின. இதில் லாரி ஓட்டுநரும் பயணிகள் 25 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
