தீமிதித் திருவிழாவுக்கும் அதற்கு முந்தைய நேர்த்திக்கடன்களான பால்குடம், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், ஆகியவற்றுக்கும் இணையப் பதிவு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கிறது.
அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீமிதித் திருவிழா சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருக்கிறது. எந்த நேர்த்திக்கடனுக்கும் நேரடிப் பதிவு கிடையாது.
அனைத்து பங்கேற்புப் பதிவுகளும் இணையம் வழிதான் செய்யப்பட வேண்டும். பதிவை உறுதிசெய்யும் செய்தி அவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பதிவுக்கான மின்னியல் கட்டணத் தெரிவுகள் இணையத்தில் தெரிவிக்கப்படும். இணையம் வழி கட்டணம் செலுத்துதல் நிறைவேற்றப்பட்டால், அந்தக் குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்கான பதிவு வெற்றிகரமாக நடந்தேறியது என எடுத்துக்கொள்ளலாம்.
பக்தர்கள் தங்கள் பதிவுகளை https://heb.org.sg/fw2024/ எனும் இணைய முகவரி மூலம் செய்யலாம். பதிவு அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு முடிவுறும்.
பதிவை உறுதி செய்வதற்கு முன், பக்தர்கள் நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம், இடம் போன்ற விவரங்களைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு பதிவை உறுதி செய்யுமாறு இந்து அறக்கட்டளை வாரியம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட்ட தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டது. பதிவை உறுதி செய்தபிறகு, அதில் மாற்றங்கள் செய்ய முடியாது என்றும் அது கூறியது.
தீமிதிக்கும் ஆண் பக்தர்கள் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் பாத ஊர்வலத்தை சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் தொடங்கி, நான்கு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கலாம்.
தீமிதி நிகழ்வுகளின் நேரலை
தீமிதித் திருவிழா தொடர்பான நிகழ்வுகளின் நேரலையைக் காண, இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப், ஃபேஸ்புக் தளங்களை நாடலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஃபேஸ்புக்: https://www.facebook.com/hinduendowmentsboard ; யூடியூப்: https://www.youtube.com/hinduendowmentsboard
தீமிதித் திருவிழா தொடர்பான மேல் விவரங்களுக்கு 6223 4064 எனும் எண்ணில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலைத் தொடர்புகொள்ளலாம் அல்லது இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக் பக்கத்தையோ அல்லது https://heb.org.sg/ எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையப் பக்கத்தையோ நாடலாம்.

