வேலைக்கு ஆள்சேர்க்கும் எண்ணம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் குறைந்தது: ஆய்வு

2 mins read
7052e358-e29a-444b-9d0f-ecc0dbea179a
சித்திரிப்பு: - பிக்சாபே

சிங்கப்பூரில் வேலைக்கு ஆள்சேர்க்கும் எண்ணம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைவான வளர்ச்சி, செலவு குறித்த சவால்களுக்கு இடையே, நிதி, சொத்துச் சந்தைத் துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்வது அண்மைச் சரிவிற்குக் காரணம்.

இவ்விரு துறைகளிலும் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் 30 விழுக்காட்டுப் புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஜூன் 11ஆம் தேதி வெளியான ‘மேன்பவர்குரூப்’ எனும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் அண்மை ஆய்வில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிகர ஆட்சேர்ப்புக் கண்ணோட்டம் என்பது, ஆள்களைப் பணியமர்த்துவது தொடர்பான நம்பிக்கைக் குறியீடு.

ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் புது ஊழியர்களை நியமிக்க எண்ணும் நிறுவனங்களின் விழுக்காட்டிலிருந்து ஆட்குறைப்பு செய்யத் திட்டமிடும் நிறுவனங்களின் விழுக்காட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ஆட்சேர்ப்புக் கண்ணோட்ட அளவைப் பெறலாம்.

நிகர ஆட்சேர்ப்புக் கண்ணோட்டத்துக்காக ஒன்பது துறைகள் ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றில் போக்குவரத்து, தளவாடம், வாகனத் துறைகளில் 47 விழுக்காட்டு நிகர விகிதம் பதிவானது.

இவ்வேளையில், தொடர்புச் சேவைகள் துறையில் ஆட்சேர்ப்புக் கண்ணோட்டம் சென்ற காலாண்டில் பதிவானதைக் காட்டிலும் மோசமாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது துறைகளைச் சேர்ந்த 525 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான ஒட்டுமொத்த ஆட்சேர்ப்புக் கண்ணோட்டம் 20 விழுக்காடாகப் பதிவானது.

44 விழுக்காட்டு நிறுவனங்கள் கூடுதலாக ஆள்களைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ள வேளையில், 24 விழுக்காட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகவும் 32 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கையில் மாற்றம் செய்யும் எண்ணமில்லை என்றும் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்