சிங்கப்பூரில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் போக்கு 2026 முதல் காலாண்டில் கணிசமான அளவு மெதுவடையும் என்று நம்பப்படுகிறது.
வேலைக்கு ஆள் எடுக்கும் விகிதம், 2022க்குப் பிறகு ஆகக் குறைவான நிலையை எட்டக்கூடும் என்று கருதப்படுகிறது. பொருளியல் நிச்சயமற்றதன்மை ஊழியரணி குறித்த உத்திகளை வகுப்பதில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 முதல் காலாண்டுக்கான சிங்கப்பூரின் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம், 15 விழுக்காடாக உள்ளது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) வெளியிடப்பட்ட மனிதவளக்குழும வேலைவாய்ப்புக் கண்ணோட்டக் கருத்தாய்வில் அது தெரியவந்தது. வேலைக்கு ஆள் எடுக்கத் திட்டமிடும் நிறுவனங்களின் விகிதத்தில் ஆட்குறைப்புச் செய்யவிருக்கும் நிறுவனங்களின் விகிதத்தைக் கழித்துவிட்டுக் கிடைக்கும் விகிதமே நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம்.
முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் அது ஐந்து விழுக்காட்டுப் புள்ளி குறைவு. ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, அது 11 விழுக்காட்டுப் புள்ளி வீழ்ச்சி கண்டுள்ளது.
வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம், நிறுவனங்களிடையே தொடர்ந்து ஆக்ககரமாக இருப்பதையே தரவுகள் காட்டுகின்றன. ஆயினும் உலகச் சராசரியுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம் குறைவாகவே உள்ளது. உலக அளவில் அது 24 விழுக்காடாக இருக்கிறது.
விரிவாக்கத்தைவிட நிலைத்தன்மையை விரும்பும் நிறுவனங்கள்
கருத்தாய்வு, 504 நிறுவனங்களிடம் நடத்தப்பட்டது. பொதுவாக அவை முன்னைய நிலைப்பாட்டையே கட்டிக்காக்க விரும்புவது அதில் தெரியவந்தது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 48 விழுக்காட்டு நிறுவனங்கள், ஊழியர்களின் விகிதத்தில் மாற்றம் செய்யும் எண்ணமில்லை என்று கூறியுள்ளன. 32 விழுக்காட்டு நிறுவனங்கள், ஊழியர் விகிதத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. 18 விழுக்காட்டு நிறுவனங்கள், ஊழியர் விகிதம் குறையும் என்று கருதுகின்றன. 4 விழுக்காட்டு நிறுவனங்கள், அதுபற்றி இதுவரை எதுவும் யோசிக்கவில்லை.
ஊழியர்களின் விகிதத்தைக் கட்டிக்காக்க விரும்புவதாகக் கூறிய நிறுவனங்களில் கிட்டத்தட்ட கால்வாசி (23 விழுக்காடு) பொருளியல் நிலைக்கேற்ப வேலைக்கு ஆள் எடுப்பதை முடிவுசெய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஊழியரணி குறித்த உத்திகளை வகுப்பதில் பொருளியல் பற்றிய அக்கறைக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிப்பது கருத்தாய்வில் தெரியவந்தது. ஊழியரணி குறித்த திட்டம் பற்றி முடிவெடுக்காதவற்றில் 43 விழுக்காட்டு நிறுவனங்கள், அதனையே காரணமாகச் சுட்டின.
ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணியிருப்பவற்றில் 30 விழுக்காட்டு நிறுவனங்கள், பொருளியல் சவால்களையே முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டன.
ஆள் எடுக்கத் திட்டமிடும் நிறுவனங்கள், வேறுசில காரணங்களை முன்வைத்தன. நிறுவன வளர்ச்சி, வேறுபட்ட திட்டங்கள், போட்டித்தன்மையை அதிகரித்தல் முதலியவை அவற்றுள் சில.
ஆள் எடுக்கும் போக்கு ஒட்டுமொத்தமாக மெதுவடைந்தபோதும், குறிப்பிட்ட சில துறைகள் ஊழியர்களைச் சேர்ப்பதில் இன்னும் துடிப்போடு இருக்கின்றன.
நிதி, காப்புறுதித் துறையில் நிகர வேலைவாய்ப்புக் கண்ணோட்டம், 33 விழுக்காடாக உள்ளது. முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் அது 23 விழுக்காட்டுப் புள்ளி அதிகம்.
மாறாக, உற்பத்தித் துறையில் அது 10 விழுக்காடாக உள்ளது. முந்திய காலாண்டுடன் ஒப்பிடும்போது அது 13 விழுக்காடு குறைவு.

