பெருமதிப்புபெற்ற ஓர் இஸ்லாமியத் துறவியின் நினைவைப் போற்றும் ஹபீப் நோ என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய மரபுடைமைத் தலம் திங்கட்கிழமை (ஜனவரி 12) முழுமையாகத் திறக்கப்படுகிறது.
ஒன்றரை ஆண்டுகாலப் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் மறுதிறப்பு தொடர்பான சமயச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) நடத்தப்பட்டன.
பால்மர் ரோட்டில் ஹாஜி முஹம்மது சாலே பள்ளிவாசலுக்கு அருகில், அமைந்துள்ள 160 ஆண்டு பழைமையான மரபுடைமைத் தலத்தில் புதிதாகக் குவிமாடம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
அதில் இஸ்லாமிய எழுத்து ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. சுவர்களுக்குப் புதிய வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. கட்டமைப்புகளுக்கு வலுவூட்டப்பட்டுள்ளன.
மரபுடைமைத் தலத்துக்கு ஏறிச் செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் நூறாண்டுகளைக் கடந்துவிட்டதால் அவை பலப்படுத்தப்பட்டுள்ளன.
பழைமை மாறாமலும் வருகையாளர்கள் பாதுகாப்பாகப் படியேறிச் செல்லவும் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. மரபுடைமைத் தலத்தின் முகப்புத் தோற்றமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்புகா அமைப்புகளை நிறுவியதுடன் அதன் வளாகத்தின் முன்புறமும் பின்புறமும் சீர்செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டுப் படிக்கட்டுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஹபீப் நோ கல்லறையுடன் கூடிய மரபுடைமைத்தலம் சிங்கப்பூரின் இஸ்லாமிய மரபுகளைத் தாங்கி நிற்கும் முக்கியத் தலங்களில் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டிஷ் குடியேற்றமாகச் சிங்கப்பூர் மாறிய பின்னர் இங்குக் குடியேறிய ஓர் அரபு மறைஞானியும் நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலுமான ஹபீப் நோஹ் அல்-ஹப்சியின் நிரந்தர ஓய்விடம் அது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மறுதிறப்பு சமயச் சடங்குகளின்போது பள்ளிவாசலின் தலைவர் காலித் முகம்மது உரையாற்றினார். மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஏறத்தாழ 2 மில்லியன் வெள்ளி செலவானதாகவும் நன்கொடையாளர்களும் பொறுப்பாதரவாளர்களும் அதனைக் கொடுத்து உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தத் தலத்தில் இதற்கு முந்தைய ஆகப்பெரிய புதுப்பிப்புப் பணிகள் 1986க்கும் 1987க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றன. குவிமாடம் கட்டுவது பெரிய சவாலாக இருந்ததாகவும் அதற்காக வெளிநாடுகளிலிருந்து நிபுணத்துவம் பெறப்பட்டதாகவும் திரு காலித் தமது உரையில் குறிப்பிட்டார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிதி வழங்கிய கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

