சிங்கப்பூரின் தீவு விரைவுச்சாலையில் (சிடிஇ) மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற விபத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணையில் ஒத்துழைத்துவருகிறார்.
அந்த 52 வயது ஓட்டுநர் விசாரணையில் தங்களுடன் ஒத்துழைப்பதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 27) தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) இரவு 8.15 மணியளவில் ஒரு காரும் மோட்டார்சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது. சம்பந்தப்பட்ட 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி நினைவிருந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நான்கு தடங்கள் உள்ள சாலையில் கறுப்பு நிற எஸ்யுவி வாகனம், ஒரு மோட்டார்சைக்கிளுக்கு அருகே சென்றுகொண்டிருந்தது இணையத்தில் பகிரப்பட்ட காணொளியில் தெரிந்தது. வாகனத்தினுள் இருக்கும் டேஷ்கேம் கேமராவில் பதிவான அந்தக் காணொளியில் அந்த எஸ்யுவி வாகனம் இடது தடத்துக்கு மாறும்போது மோட்டார்சைக்கிள்மீது மோதியதும் தெரிந்தது.
பின்னர் அந்த எஸ்யுவி கார் சிறிது நேரம் நிறுத்தியது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டது.
மோட்டார்சைக்கிளோட்டி தலைக்கவசம் அணிந்தபடி தரையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவர் மோட்டார்சைக்கிள் ஆக வலது புறம் இருந்த சாலைத் தடுப்பு மீது மோதியது.