மலேசியா நோக்கிச் செல்லும் ஜோகூர் கடற்பாலத்தின் குறுக்கே காரை ஓட்டிச் சென்ற ஒருவர், துணை காவல்துறை அதிகாரி மீது மோதியதாகவும், விபத்துக்குப் பிறகு உதவி செய்ய வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரை உரிய கவனிப்பும் கவனமுமின்றி ஓட்டிச் சென்று, துணை காவல்துறை அதிகாரிக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாக 27 வயதான சூரிய கணேசன் மீது புதன்கிழமை (ஜனவரி 21) அன்று குற்றம் சாட்டப்பட்டது.
மலேசியரான சூரியா, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று பிற்பகல் 3 மணியளவில் மலேசியக் குடிநுழைவு சோதனைச் சாவடியை நோக்கி காரை ஓட்டிச் சென்றார். அப்போது, வாகனம் வேறொரு பாதையில் பாய்ந்து அந்த நபரை மோதியதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரமும் குறிப்பிடப்படவில்லை.
சூர்யாவின் வழக்கு பிப்ரவரி 24ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
சிங்கப்பூர் சோதனைச் சாவடி அருகே நடந்த போக்குவரத்து விபத்தைத் தொடர்ந்து துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தது தொடர்பாக, ஓராண்டுக்குள் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும்.


