ஹாலந்து ரோடு ஷாப்பிங் சென்டரில் இயங்கும் ‘வெல்லீஸ் பாத்திக்’ கடையில் ‘பாத்திக் அங்கிள்’ என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு ஆங் கும் சியோங், தமது 100வது பிறந்தநாளை சனிக்கிழமை (டிசம்பர் 13) குடும்பத்தினருடன் அதேக் கடையில் கொண்டாடி மகிழ்ந்தார்.
அந்தக் கடையை அவர் 1978ஆம் ஆண்டு தொடங்கினார். பலருக்கும் அவரவர் தேவைக்கேற்ப பாத்திக் வடிவங்களில் அவர் துணிமணிகளை வழங்கிவந்துள்ளார். ஹாலந்து வில்லேஜ் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ள பேரங்காடியில் அவர் மூன்றாம் மாடியில் இருந்து வர்த்தகம் செய்துள்ளார்.
நினைவுப் பரிசுகள், கேக் என விழாக்கோலம் பூண்டிருந்த கடைக்கு அவருக்கு வாழ்த்துகளுடன் பலர் பகல் 3.30 மணிமுதல் வரத் தொடங்கினர். இன்றும் பணியாற்றும் அவருக்கு மாலை 5.30 மணிவரையிலும் பிறந்தநாளைக் கொண்டாட நண்பர்கள் வந்தனர். பலர் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர்.
அவரைக் காண வந்திருந்த பல பிரபலங்களில் முக்கிய சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அமைந்தார். திரு ஆங்கை மதியம் சந்தித்து அமைச்சர் சிறிது நேரம் உரையாடி வாழ்த்துகள் வழங்கிச் சென்றார்.
பாத்திக் கடையின் நிர்வாகத்தை ஏற்றுள்ள திரு ஆங்கின் இளைய மகன் திரு எரிக், வாடிக்கையாளர்களாக சுகாதார அமைச்சர், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் அமைந்திருப்பது அதிர்ஷ்டமானது என்று குறிப்பிட்டார்.

