டெய்ரி ஃபார்ம், தஞ்சோங் ரூ, டோவர் பகுதிகளில் விற்பனைக்கு வரும் வீட்டுக் கட்டுமானத் தளங்கள்

2 mins read
92c681d4-f33a-4e0a-a1bf-5f81a7ff3ae7
‘தஞ்சோங் ரூ ரோடு’ கட்டுமானத்தளத்தின் கிழக்குப் புறம் சிங்கப்பூர் நீச்சல் சங்கம் உள்ளது. தனியார், பொது வீடமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. - காணொளிப் படம்: கூகல் மேப்ஸ்

நகர மறுசீரமைப்பு ஆணையம், குடியிருப்புக்கான மூன்று கட்டுமானத் தளங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் (2025) பிற்பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ், அவை வெளியிடப்படுவதாக ஆணையம் புதன்கிழமை (நவம்பர் 26) தெரிவித்தது.

டெய்ரி ஃபார்ம், தஞ்சோங் ரூ, டோவர் பகுதிகளில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் வரவிருக்கின்றன. அவற்றில் முறையே கிட்டத்தட்ட 480, 525, 625 வீடுகள் கட்டப்படக்கூடும் என்று ஆணையம் கூறியது. ஆண்டின் பிற்பாதியில் அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் அறிமுகம் காணவிருக்கும் 4,725 வீடுகளில் அவையும் அடங்கும்.

டெய்ரி ஃபார்ம் வாக் தளத்தின் பரப்பளவு 29,444.2 சதுர மீட்டர். அதில் வீடுகள் கட்டுவதற்கான தளத்தின் அதிகபட்சப் பரப்பளவு 41,222 சதுர மீட்டர்.

அங்குக் கூட்டுரிமை வீடுகளையும் அடுக்குமாடி வீடுகளையும் கட்டமுடியும். அதில் கால்வாயை நோக்கிய பகுதியில் மூன்று மாடிகளைக் கட்டலாம். எஞ்சிய பகுதியில் 5 மாடிகள் வரை கட்டமுடியும்.

டெய்ரி ஃபார்ம் வாக், டெய்ரி ஃபார்ம் ஹைட்ஸ் சந்திப்பில் அமைந்துள்ள அதனை புக்கிட் தீமா விரைவுச்சாலை, அப்பர் புக்கிட் தீமா ரோடு, கே‌‌‌ஷ்யூ எம்ஆர்டி நிலையம் முதலியவற்றின் மூலம் அணுகலாம். சைக்களில் செல்வதற்கும் நடந்துபோவதற்கும் பாதைகள் இருக்கின்றன. ஏலக்குத்தகை, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு முடிவுறும்.

தஞ்சோங் ரூ ரோடு தளத்தின் பரப்பளவு 12,239.2 சதுர மீட்டர். அதில் வீடுகள் கட்டுவதற்கான தளத்தின் அதிகபட்சப் பரப்பளவு 45,285 சதுர மீட்டர். அங்கும் கூட்டுரிமை வீடுகள் அல்லது அடுக்குமாடி வீடுகளைக் கட்டலாம்.

அந்தத் தளத்தின் வடக்கே தஞ்சோங் ரூ ரோடும் கிழக்கே சிங்கப்பூர் நீச்சல் சங்கமும் இருக்கின்றன. அருகில் தஞ்சோங் ரூ, கத்தோங் பார்க் எம்ஆர்டி நிலையங்கள் உள்ளன. ஏலக்குத்தகை, அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு முடிவடையும்.

டோவர் டிரைவ் தளத்தின் பரப்பளவு 13,517.2 சதுர மீட்டர். அதில் வீடுகள் கட்டுவதற்கான தளத்தின் அதிகபட்சப் பரப்பளவு 56,773 சதுர மீட்டர். அங்கும் அடுக்குமாடி வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

டோவர்-மெட்வே வட்டாரத்தில் கட்டுமானத் தளம் அமைந்துள்ளது. அது, ஒன்-நார்த் எம்ஆர்டி நிலையத்துக்கும் ஆயர் ராஜா விரைவுச்சாலைக்கும் அருகில் இருக்கிறது.

ஏலக்குத்தகை, அடுத்த ஆண்டு (2026) மார்ச் 26ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு முடிவுறும்.

குறிப்புச் சொற்கள்